ஜனாதிபதியே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்- நேர்காணலில் Dr. ஜயம்பதி கருத்து


jayamp

நாட்டில் பாராளுமன்ற ரீதியான ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர் ஒருபோதும் ஏற்பட்டிராத ஒரு அரசியல் நிலைமை தற்பொழுது காணப்படுகின்றது. நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். நாட்டில் அரசியல் யாப்பு ரீதியில் நெருக்கடி நிலைமையொன்றே உருவாகியுள்ளதாக இன்னும் சிலர் கூறிவருகின்றனர்.

நாடு எதிர்க் கொண்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் வினவியபோது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்த தீர்மானம் நீதிமன்றத்தில் சவாலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்

நீதிமன்றம் இது தொடர்பில் பெற்றுக் கொடுத்த தீர்ப்பை இந்நாட்டு மக்கள் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாக பார்க்கின்றேன். எமக்கு நீதியான ஒரு தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

நான் நினைக்கின்றேன், இந்த வெற்றியானது நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் ஒரு பிரதிபளிப்பாகும். எமக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறிதளவாவது நீதிமன்றத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முடிந்தது.

அதேபோன்று, அந்த நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப் பெறுவதற்கான பிரதான காரணம், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழல் என்றும் நான் நம்புகின்றேன்.

கேள்வி –

ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில் –

சட்ட மா அதிபரின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லையே. இந்த விடயம் விவாதித்து தீர்வு பெற வேண்டியளவு முக்கியமான ஒன்று என உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தேர்தலை பிற்போடும் அளவுக்கு நாம் முன்வைத்த தர்க்கம் போதுமானது என நீதிமன்றம் அங்கீகரித்தது. முதலாவது சுற்றில் சட்ட மா அதிபர் தோல்வியடைந்துள்ளார். இரண்டாவது சுற்றிலும் அவர் தோல்வியடைவார். 
 
சட்ட மா அதிபர்கள் சொல்வது எல்லா நேரத்திலும் சரியானது என்பது அர்த்தமல்ல. சட்ட மா அதிபர்களினால் தொடுக்கப்பட்ட வழக்குகளும் தோல்வியடைந்துள்ளன. நாமும் வழக்கில் தோல்வியடைந்துள்ளோம். அவற்றில் வெற்றிபெற்றும் உள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் நாமே வெற்றி பெற்றோம்.
 
கேள்வி

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக உள்ளவர்கள் அரசியலமைப்பின் 33.2 (ஏ) மற்றும் 70.5 ஆகிய உறுப்புரையை ஆதாரமாக காட்டுகின்றனர். இதன்படி ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சரியானது எனவும் கூறுகின்றனர். உங்கள் வாதம் என்னவாக இருக்கின்றது ?

பதில்

இந்த சகல விடயங்களும் உயர் நீதிமன்றத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களுக்கு நியாயம் காட்டுவதற்காகவே இந்த சட்டங்களை அவர்கள் காட்டுவதாகவே எனக்கு விளங்குகிறது.

நீங்கள் (ஊடகவியலாளர்கள்) அவர்களுக்காக பேச வேண்டாம். பக்கச் சார்பற்ற ஊடகவியலாளராக பேசுங்கள். நீங்கள் உயர் நீதிமன்றத்தில் தோல்வியடைந்த நியாயங்களை மீண்டும் என் முன்னே முன்வைக்கின்றீர்கள். இவர்கள் முன்வைக்கும் வாதத்தை உயர் நீதிமன்றத்தில் முன்னிருத்தினால், இந்த வழக்கின் ஒரு எட்டைக் கூடா முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என கூறினர். இருப்பினும், அந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

கேள்வி

நான் எந்தவொரு தரப்பின் கருத்துக்காகவும் வக்காளத்து வாங்க மாட்டேன். இருப்பினும், ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்காக முன்வைத்த காரணம் தொடர்பில் கேட்டறிய வேண்டியுள்ளேன். இது தொடர்பான எதிர்வரும் வழக்கில் சகலருடைய நியாயங்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் அல்லவா?

பதில்

முதலில் அடிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். அதற்கு முன்னர் அடுத்த தரப்பினரின் எதிர்ப்பை வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும். அந்த எதிர்ப்புக்களுக்கு மாற்றுக் கருத்தை தெரிவிக்கவும் எமக்கு அவகாசம் வழங்கப்படும். உயர் நீதிமன்றத்தில் சமகாலத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து இதனைவிட கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதல்ல. என்னால் கூற முடியுமான ஒன்று இருக்கின்றது. அதுதான், நாம் முதல் சுற்றில் வெற்றி பெற்றோம். இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெறுவோம்.

கேள்வி

ஐக்கிய தேசிய முன்னணிக்கு மீண்டும் அரசாங்கம் ஒன்று அமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் ரணில் விக்ரமசிங்கவையோ கரு ஜயசூரியவையோ பிரதமர் பதவியில் அமர்த்துவதில்லையென்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களில் ஓரளவாவது உண்மைத் தன்மை இருந்தால், ஐ.தே.முன்னணி எடுக்கும் தீர்மானம் என்னவாக இருக்கும் ?

பதில்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள குழுவில் இருந்துதான் ஜனாதிபதி தனது பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, அவரை கொண்டுவாருங்கள், இவரைக் கொண்டு வாருங்கள் எனக் கூற அவருக்கு முடியாது.

பிரதமர் யார் என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. பெரும்பான்மை பலம் உள்ள குழுவினாலேயே பிரதமர் யார் என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தன்னுடைய கட்சியில் அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் மாத்திரமே அவருக்கு வேண்டியவரை தீர்மானிக்க முடியும்.

இந்தக் காரணங்களினால் தான் நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றோம். நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கு அடுத்த கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இருப்பினும், அவர் அரசியலமைப்பினூடாக செயற்பட வேண்டியுள்ளார். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி தீர்மானிக்கும் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பது தெளிவாகவுள்ளது. இது இவ்வாறிருக்கையில் ஜனாதிபதிக்கு வேண்டிய பிரகாரம் செயற்பட்டால், அது பாரிய சிக்கலையே ஏற்படுத்தும்.

இந்த நாட்டின் எல்லா ஜனாதிபதிகளும் தனது விருப்பு வெறுப்புக்களுக்கேற்பவே செயற்பட்டனர். நாம் கொண்டுவந்த ஜனாதிபதியும் அவ்வாறு செயற்படுவதானது கவலையளிக்கிறது.

 கேள்வி  

தங்களிடம் பெரும்பான்மைப் பலம் இருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அவருடன் உள்ளவர்களில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் இருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஆதரவு வழங்குவார்களா?

பதில்

பாராளுமன்றத்தில் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தமக்கு ஆதரவு வழங்காது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இருப்பினும், இந்த சந்தர்ப்பத்தில் அக்கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படுகின்றது. அந்த பாராளுமன்ற உறுபினர்கள் இல்லாமலும், அதிகப்படியானோரின் ஆதரவு ஐக்கிய தேசிய முன்னணிக்கே உள்ளது. இங்கு முக்கியமான அம்சம் அதுதான்.

 கேள்வி

ஐக்கிய தேசிய முன்னணிக்கு 113 பேர் இருக்கிறார்களா?

 பதில்

தெளிவாகவே 113 பேர் இருக்கின்றார்கள். இருப்பினும், தேவைப்படுவது அதிகப்படியானோரின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதுவாகும். பாராளுமன்றத்தில் 3 பிரிவாக பிரிந்தால் யாருக்கும் பெரும்பான்மை கிடைப்பதில்லை. இந்த வேளையில், அதிகப்படியான ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதையே பார்க்க வேண்டியுள்ளது. குறித்த நபருக்கு தோல்வியடையாமல் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என்றால், அதற்குத் தான் பாராளுமன்ற ஜனநாயகம் என்று கூறுகின்றோம். ஜனநாயகம் செயற்படுவது அப்படித்தான்.

கேள்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு தயாராகிவருவதாக. அப்படியான தயார் நிலைகள் உள்ளதா?

பதில்

அப்படியான எந்த திட்டமும் இருக்கவில்லை. அரசியலமைப்புச் சபைக்கு சட்ட மூலம் எதனையும் முன்வைக்காமல் புதிய அரசியலமைப்பை எவ்வாறு கொண்டுவர முடியும். அத்துடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியம். எம்மிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ என்னவோ தெரியாது.

கேள்வி

புதிய அரசியலமைப்பு சட்ட மூலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் அந்த இரண்டையும் இணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்டது. இது குறித்து?

பதில் –

அது பொய்யான செய்தி. அது புதிய கருத்துமல்ல. வடக்கு கிழக்கை இணைக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி சொல்லவில்லை. அந்த இரு மாகாணங்களையும் இணைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் டக்ளஸ் தேவானந்தாவுமே கூறிவருகின்றனர். அவ்வாறு சொல்லும் டக்ளஸ் தேவானந்தா இன்று மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார். அவருக்கு கெபினட் அமைச்சொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக செயற்படுதல் மற்றும் ஊழல் என்பவற்றின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தாரே ?

பதில் –

அதற்குத்தான் சட்ட ரீதியிலான வழிமுறைகள் உள்ளனவே. பாராளுமன்றத்தில் இந்த அரசாங்கத்தை தோற்கடித்து சட்ட ரீதியான முறையில் அதனை செய்திருக்கலாம். வரவு செலவுத் திட்டம் கடந்த 05 ஆம் திகதி முன்வைக்கப்படவிருந்தது. அதனைத் தோற்கடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அரசியலமைப்பு ரீதியிலான முறைகள் அதுவாகும். அதனைச் செய்யாது சட்டவிரோதமான முறையில் செய்ய முற்பட்தனால்தான் இந்த அரசியல் நெருக்கடி நிலைமை உருவானது.

சொல்ல கவலையாகவுள்ளது. நாம் கொண்டுவந்த ஜனாதிபதிதான் இந்த அரசியல் நெருக்கடி நிலைமைக்கு முழுமையாக பொறுப்புக் கூற வேண்டியுள்ளார்.

நன்றி – ஞாயிறு திவயின

தமிழில் – கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

One comment

  1. Sulaimalebbe Abdul Gaffoor

    Athuthan unmai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>