பாராளுமன்ற அமளி துமளி – ஒர் ஓரக் கண் பார்வை


image_c322dcda7e

இலங்கை ஜனநாயகக் குடியரசின் நாடாளுமன்றம் சட்ட ஒழுங்குகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்ட ஓர் இடமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சிறு சிறு சம்பவங்களினால் உள்ளங்களில் இருந்த இந்த சந்தேகம் தற்பொழுது வார்த்தைகளால் வெளிப்படுத்தும் அளவுக்கு நாட்டை நேசிக்கும் மக்கள் உந்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக அவதானித்த மக்கள், அரசியலைப் பற்றியும், அரசியல் வாதிகளைப் பற்றியும் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்பது  மிகைப்படுத்தப்படாத ஓர் உண்மையாகும்.

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் சட்டப் பத்திரங்களின் பிரதிகளை எரிப்பது, புத்தகங்களை வீசி எறிவது மற்றும் சபை நடுவில் வந்து அமர்வது என்பவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சிலபோது கறுப்புப் பட்டிகளை அணிந்து கொண்டு வந்து ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்புக்களை முன்வைத்தனர்.

ஆனால், பாராளுமன்றத்தில் கடந்த 14, 15, 16 ஆம் திகதிகளில் அதன் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய நடத்தைகள், சராசரி மனித தன்மை நிலையிலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளாகவே பார்க்கப்பட்டன.

தமக்கு வரும் வெறுப்புக்களையும் அதிருப்தியையும் தங்களைத் தெரிவு செய்த முழு நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளிப்படுத்திய விதம் அசிங்கமானதாகவே காணப்பட்டன என்பது சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும்.

இந்த நாட்டில் வாழும் நல்ல, சிறந்த மனிதர்களை ஆளும் சட்டத்தை இயற்றும் முக்கிய சபையில் இருப்பவர்கள், இத்தகைய பண்பாடற்றவர்களா? என்ற கவலை குடிமக்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்தில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாராளுமன்றத்துக்குள் இருக்கும் பிரதிநிதிகள் கல்வி நிலையில் பின்தங்கியவர்கள் எனவும், கிராமங்களில் சாராயம் வடித்தவர்கள் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்தார்.

நேற்று (16) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியிருந்தார். நேற்றைய அசம்பாவித்தில் அவரது தலையிலும் இரத்தக் காயம் ஏற்பட்டிருந்தது.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கத்தியுடன் இரு உறுப்பினர்கள் காணப்பட்டனர் என்பதை ஊடகங்கள் உலகிற்குக் காட்டின. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான சட்டம் ஒழுங்கை வகுக்கும் சபையிலுள்ளவர்களிடம் கொலை வெறியா?

கடந்த 16 ஆம் திகதி சபையில் பொதுச் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டன. பொது மக்களின் சொத்துக்கள் பொது மக்களின் முன்னாலேயே எந்தவித வெட்கமும் இல்லாமல் உடைத்து சேதப்படுத்தப்பட்ட காட்சிகளை பார்க்க நேரிட்டமை கவலைக்குரிய ஒன்றாகும்.

கட்சித் தலைவர்களாலும், பொறுப்பு மிக்க பதவியில் இருந்தவர்களாலும் சட்டத்தை நிலைநாட்ட முடியாமல் போனது. “பாராளுமன்ற சிறப்புரிமை” என்பதன் விளக்கம் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் தவறாக புரியப்பட்டிருக்கும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.

பாராளுமன்ற சபை எல்லைக்குள் ஒருவரைக் கத்தியால் குத்தி தாக்கினாலும், கொலையே செய்தாலும் அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதா? ஊடகங்களில் நடைபெற்ற செவ்வை செய்யப்படாத காட்சிகளும், ஏன்,…. இந்த நாட்டு மக்களும் நடந்த சம்பவத்துக்கு குற்றவாளிகளை இணங்காட்ட போதுமான சான்றுகளாக உள்ளனர்.

யாராவது ஒருவர் நாட்டின் எந்தவொரு இடத்திலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சாட்சிகளுடன் அடையாளம் காணப்பட்டால் அவருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது. பாராளுமன்றம் மட்டும் அதற்கு விதிவிலக்கா? பாராளுமன்ற சிறப்புரிமை என்பதன் விளக்கம் இதுவா? பாராளுமன்றத்தில் உடைத்த சொத்துக்கள் அவர்களது சொந்தச் செலவில் வாங்கப்பட்டவை அல்ல. பொது மக்களின் வரிப் பணத்தில் பெறப்பட்டவை. உடைத்து சேதப்படுத்திய சொத்துக்களுக்கு முழு நாட்டு மக்களிடமும் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்பது மட்டுமல்ல, நஷ்டஈட்டையும் அவர்கள் செலுத்த வேண்டும் என்பதுதான் தேனீர்க் கடையில் இந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவரின் ஆவேசமாக இருந்தது.

சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தும் போது கட்சித் தலைவர்கள் சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனைத் தடுப்பதற்கு எந்தவித சிறு நடவடிக்கையைக் கூட அவர்கள் முன்னெடுக்க வில்லை.

நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை சூரையாடும் போதும், தீ வைத்து எரிக்கும் போதும், சேதப்படுத்தும் போதும் பொறுப்பிலுள்ளவர்கள் இவ்வாறுதான் முடியும் வரையில் வேடிக்கை பார்க்கிறார்களா? என சிந்திக்கத் தோன்றுகின்றது.

சட்டத்தைப் பாதுகாக்கும் பொலிஸார் மீது கதிரையை வீசி தாக்குகிறார்கள். கொச்சிக்காய்த் தூளை தண்ணீரில் கரைத்து ஒருவர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அடுத்தவருடைய அந்த துன்பத்தில் கைதட்டி இன்பம் காண்டார்கள்.

போதாமைக்கு, இந்த அத்தனை நிகழ்வுகளும் நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்புக்களை கூட்டி, தான் அப்படிச் செய்யவில்லையென வாய் கூசாமல் கதைவேறு கூறுகின்றார்கள். தான் செய்த தவறை நியாயப்படுத்த மாற்று எத்தனங்கள் வேறு.

குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்துக்குள் பொலிஸார் பிரவேசித்ததை பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் என கேள்வி கேட்பது எவ்வளவு வேடிக்கையானது.

மூன்றாவது கண்ணினால் உலகமே பார்த்துக் கொண்டிருக்கும் போது மூடி மறைக்கக் கூடிய எந்தவித சான்றுகளும் இல்லாத நிலையில் பாராளுமன்றத்தில் அரங்கேற்றப்பட்ட அராஜகத்துக்கு மக்கள் முன்னிலையில் தோன்றி தனது தவறை நியாயப்படுத்த முற்படுகின்றார்கள் என்றால், இத்தகையவர்களின் ஏனைய விடயங்கள் எப்படியிருக்கும் என சிந்திப்பதற்கு வெகு நேரம் தேவைப்படாது.

எமது நாட்டின் பேரும் புகழும் சர்வதேசத்தில் காற்றில் பறந்திருக்கும் என்று கூறாதவர்கள் இல்லை.

பாடசாலையில் வகுப்பு ஆசிரியரின் கதிரையில், மாணவர்கள் அமர்வதில்லை. அதிபரின் கதிரையில், ஆசிரியர்கள் அமர்வதில்லை. காரணம் அது ஒழுங்கில்லை என்பதாகும். மேலும், உயர் அதிகாரியின் கதிரையில் சாதாரண ஒருவர் அமர்வது ஒழுங்குக்கு முரணான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. நேற்றைய பாராளுமன்ற அசம்பாவிதம் ஆரம்பித்ததே சபாநாயகரின் கதிரையில் முறைகேடாக அமர்ந்தது முதலே என்பது நோக்கத் தக்க ஒன்றாகும்.

நாட்டில் அனைவராலும், மதிக்கத் தக்க, கௌரவமான, அழகான ஒரு உயர் பீடமாக பாராளுமன்றம் பார்க்கப்படுகின்றது. அதன் அழகைப் பேணுவதும், அதன் சிறப்பைப் பாதுகாப்பதும் எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றது.

இந்த நிலையில் நேற்றைய அசம்பாவித்ததில் சபாநாயகரின் கதிரை இழுத்து வீசி எறியப்பட்டது. சபாநாயகரின் முன்னால் போடப்பட்டிருந்த தளபாடங்கள் சேதப்படுத்தப்பட்டன. தொலைபேசிகள், மைக்ரோபோன் என்பன   வெறித்தனமாக சேதப்படுத்தப்பட்டன. பிரச்சினைக்குத் தீர்வு வன்முறையா? என்பது இவற்றை ஊடகங்களில் அவதானித்த எல்லோரின் மனங்களிலும் எழுந்த ஒரே மாதிரியான வினாவாகும்.

நாட்டுக்கு சட்டமியற்றும் உயர்ந்த இடமான பாராளுமன்றம் முன்மாதிரி மிக்க இடமாக இருக்க வேண்டும். அங்கு அங்கத்துவம் வகிப்பவர்களுக்கென்று தகைமையொன்று வரையறுக்கப்பட வேண்டும். யாரு வேண்டுமானாலும், சட்ட சபைக்கு செல்லலாம் என்ற நிலைமை மாற்றப்பட வேண்டும்.

உழைப்பதற்காகவும், தன்னை பொருளாதாரத்தில் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் பணத்தை வாரி இறைத்து பாராளுமன்றத்தில் சீட்டுப் பெற முயற்சிக்கும் நிலைமை மாற வேண்டும். இந்த மாற்றம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அடிப்படைகள் என்று ஒருவர் கூறினால், நியாயமாக சிந்திப்பவர்கள் யாரும் கருத்து முரண்பட மாட்டார்கள்.

வகுப்பறையில் கட்டுப்படாத சிறுவர்களை, இடத்தில் அமருங்கள் ! அமைதியாக இருங்கள் என மீட்டி மீட்டி பல தடவைகள் கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரைப் போன்று, பாராளுமன்றத்தில் சபாநாயகரும் ஆசனத்தில் அமருங்கள் ! தயவு செய்து ஆசனத்தில் அமருங்கள் ! என்று ஒரு சபை அமர்வில் எத்தனை தடவைகள் கூறுகின்றார்கள். இதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், இந்தக் கேள்விக்கு விடை தெரியாத யாரும் இருக்க மாட்டார்கள்.

அத்தோடு, பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தவறு செய்பவர்களை சட்டத்தின் முன் தண்டிப்பதற்கு எந்தவித தடையும் இருக்கக் கூடாது. அவ்வாறு சிறப்புரிமை என்ற போர்வையில் தப்பித்துக் கொள்ள உள்ள வழிகளை அடைக்க வேண்டும். குற்றவாளியும், ஓழுங்கு தவறியவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும் தப்புவதற்கான ஒரு சரத்தல்ல பாராளுமன்ற சிறப்புரிமை என்பது.

இதனை மாற்றிக் கொள்வதற்கும் பாராளுமன்றத்திலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. தங்களுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்திலுள்ள இப்படியானவர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்பது நடைமுறை அரசியல் யதார்த்தமாகும்.

எனவே, இவற்றை மக்கள் நீதிமன்றத்தில் தான் தீர்க்க வேண்டும். தேர்தல் ஒன்று வருகின்றபோது ஒவ்வொரு குடிமகனும் தனது கொள்கையாக இதனை ஆக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்கும், போலியான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று இப்படியானவர்களையே நாட்டின் உயர்ந்த சபைக்கு தெரிவு செய்வதா? என்பதை ஒரு தடவைக்குப் பல தடவைகள் எமது உள்ளங்களைக் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களும் பாராளுமன்ற ஒழுங்கு மறுசீரமைப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்துவதை ஒரு கோஷமாக மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்பது இதுபோன்ற சம்பவங்களில் வெறுப்புக் கொண்ட அனைவரினதும் உள ஆதங்கமாகும்.

நிகழ்வுகளை வைத்து கோபப்பட்டு விட்டு ஒதுங்கியிருப்பதனால் மாற்றம் ஏற்படப் போவதில்லை. நாம் மாறினால் நாடு மாறும் என்பதற்கு ஏற்ப எமது பெறுமதியான தீர்மானங்களை நாங்களாக உணர்ந்து எடுத்துக் கொள்ள முயற்சிப்போம்.    (மு)

– முஹிடீன் இஸ்லாஹி M.A. (Cey)

கஹட்டோவிட்ட.

see

tew

sees

ref

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>