இலங்கை கிரிக்கெட் புதிய தெரிவுக் குழுத் தலைவராக அசந்த டி மெல் நியமனம்


Asantha-De-Mel1

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும். தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவருமான அசந்த டி மெல், இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல், இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக, கிரஹெம் லெப்ரோய் செயற்பட்டு வந்தார்.இந்நிலையில், இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கும், வீரர்கள் தெரிவு தொடர்பிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கிரஹெம் லெப்ரோய் உள்ளிட்ட முன்னாள் தெரிவுக் குழு உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை கடந்த 25ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சில் சந்தித்தனர்.

அத்துடன், கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக, இலங்கைக் கிரிக்கெட் துறைக்கு வழங்கிய சேவைகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தெரிவுக் குழு நியமனம் தொடர்பிலான அறிவிப்பையும் இந்தச் சந்திப்பின் போது வெளியிட்டார்.

இதன்போது, முன்னாள் தெரிவுக் குழு உறுப்பினர்களான காமினி விக்கிரமசிங்க, ஜெரில் வவுட்டர்ஸ், எரிக் உபஷாந்த உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இலங்கைக் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக அசந்த டி மெல்லை நியமிக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசந்த டி மெல், இதற்குமுன் 2004 ஆம் ஆண்டு முதற்தடவையாக, தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், அன்று முதல் சுமார் எட்டு வருடங்கள் (2012 வரை) கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

1982 ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான அசந்த டி மெல், 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். அத்துடன், துடுப்பாட்டத்திலும் முன்னிலை வீரராகத் திகழ்ந்த இவர், 326 ஓட்டங்களையும் குவித்தார். மேலும் 1982 ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இவர், 57 போட்டிகளில் விளையாடி, 59 விக்கெட்டுக்களையும், 466 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்தும், 1987 இல் ஒருநாள் அரங்கிலிருந்தும் இவர் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னனை தெரிவுக் குழுக்களில் கடமையாற்றிய முன்னாள் வீரர்களான பிரண்டன் குருப்பு, ஹேமந்த விக்கிரமரத்ன மற்றும் சமிந்தமெண்டிஸ் ஆகியோர், புதிய தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

-ஐ. ஏ. காதிர் கான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>