சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?


social-media-marketing-course-in-chennai-tamilnadu
- நுஸ்கி முக்தார் -

– நுஸ்கி முக்தார் –

சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.

நவீன ஊடகங்கள் அறிமுகமான காலகட்டத்தில் இந்த நிலைமை இவ்வாறு காணப்படவில்லை. இணைய வசதி கொண்ட கணினியினூடாக மாத்திரமே இவற்றை பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் காணப்பட்டதே அதற்கு காரணம். எனினும், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் வருகை இவற்றை பரவலாக பயன்படுத்த வைத்தது. இதேவேளை, குறைந்த கட்டணத்துடன் கூடிய இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை இதற்கு மேலும் வலு சேர்த்தது.

இலங்கையில் இணைய பாவனை:
இந்த மாற்றமானது எமது நாட்டிலும் இணைய பாவனையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பை ஏற்படுத்தியது. அண்மைய தரவுகளின் படி இலங்கையில் இணைய பாவனையாளர்கள் சுமார் 6.7 மில்லியன் பேர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது மொத்த சனத்தொகையில் சுமார் 30 வீதமாக காணப்படுகின்றது. இது இவ்வாறு இருக்க இலங்கையில் சுமார் 23 மில்லியன் கையடக்க தொலைபேசி இணைப்புக்கள் காணப்படுவதாக அந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது இலங்கையின் சனத்தொகையை விடவும் சுமார் 2 மில்லியன்கள் அதிகமானதாகும்.

163_picture_news_pagesபேஸ்புக் மற்றும் வாட்சப்:
பேஸ்புக் மற்றும் வாட்சப் என்பன தொடர்பாடலுக்காக பயன்படும் சமூக ஊடகங்களாகும். இலங்கையில் மிக அதிகமாக பிரவேசித்துள்ள இணையத்தளங்களில் முதல் நான்கு இடத்துக்குள் பேஸ்புக் காணப்படுகின்ற அதேவேளை, சுமார் 6.2 மில்லியன் பேர்கள் பேஸ்புக் பாவனையாளர்களாக காணப்படுகின்றனர். இதில் 80 வீதமானவர்கள் ஸ்மாட் கையடக்க தொலைபேசியினூடாக பேஸ்புக் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இலங்கையில் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் சுமார் 4.1 மில்லியன் பேர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கடந்த

ஒக்டோபர் மாத தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கூகுல் மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு தளங்களிலும் அதிக பயன்பாடு கொண்ட (Top Apps) செயலிகளில் முதல் இடத்தில் வாட்சப் (WhatsApp) காணப்படுகின்றது. பேஸ்புக்கில் எழுத்துப்பதிவுகளை பதிவிடுதல், படங்கள் மற்றும் காணொலிகளை பதிவேற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். வாட்சப் செயலியிலும் பேஸ்புக் போன்றே எழுத்துப்பதிவுகள், படங்கள் மற்றும் காணொலிகளை பகிர்வு செய்ய முடியும். வாட்சப் குழுக்கள் ஊடாக அவற்றை அதிகமானவர்களுக்கு ஒரு சில வினாடிகளில் சென்றடைய செய்யலாம். பேஸ்புக் மற்றும் வாட்சப் செயலிகளுக்கு மேலதிகமாக இலங்கையில் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலிகளாக வைபர் (Viber) மற்றும் ஐ.எம்.ஒ (IMO) ஆகிய செயலிகளை குறிப்பிடலாம். எனினும் அவற்றை விட அதிகமாக பயன்படுத்தும் செயலிகளாக பேஸ்புக் மற்றும் வாட்சப் இனங்காணப்பட்டுள்ளன. இந்த சமூக ஊடகங்களில் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுத்துப்பதிவுகளை பதிவு செய்யவோ பகிரவோ முடியும்.

‘பேஸ்புக் சமூக தரநிலைகள்’ (Facebook Community Standards):
பேஸ்புக் மற்றும் வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்கள் எந்தவித கட்டுப்படுகளுக்கோ தனிக்கைகளுக்கோ உட்படுத்தப்படுவதில்லை. பாரம்பரிய ஊடகங்கள் போன்று இவற்றில் செய்தி ஆசிரியர்களோ ஒப்பு நோக்குனர்களோ காணப்படுவதில்லை. எவரும் தமக்கு விரும்பிய கருத்துக்களை விரும்பிய மொழியில் பகிர முடியும். ஆனால் இந்த திறந்த தன்மையை பாதகமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தற்பொழுது எல்லை மீறி சென்றுள்ளது. தனி நபர்களை தாக்குதல், ஒரு குழுவினரை இலக்கு வைத்து பதிவுகளை மேற்கொள்ளல், ஒரு மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளும் பேஸ்புக்கில் இடம்பெற்று வருகின்றது. இவற்றை குறைப்பது பேஸ்புக் நிறுவனத்துக்கு இலகுவான ஒரு காரியமல்ல. ஏனெனில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அனைத்து விடயங்களும் ஆங்கிலத்தில் மாத்திரம் பதியப்படுவதில்லை. பல்வேறு மொழிகளில் அவை பதியப்படுகின்றன. 2018ம் ஆண்டின் மூன்றாவது கலாண்டுவரை 2.27 பில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் இருப்பதாக பேஸ்புக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவர்கள் அனைவரையும் கண்காணிப்பது சாத்தியமான விடயமல்ல. அதற்காக பேஸ்புக் அறிமுகப்படுத்திய ஒரு விடயம் தான் ‘பேஸ்புக் சமூக தரநிலைகள்.’ (Facebook Community Standards) இதன் ஊடக பேஸ்புக்கில் பதிவிடப்படும் பதிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எவை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் எவை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ‘பேஸ்புக் சமூக தரநிலைகள்’ கோடிட்டுக்காட்டுகின்றன. பொதுமகள் பாதுகாப்பு, சமத்துவம், நம்பகத்தன்மை, புலமைச்சொத்து, வெறுப்புப் பேச்சு போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த தரநிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏனைய பதிப்பான பதிவுகளுக்கு எதிராக பேஸ்புக் பவனையாளர்களே முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

முறைப்பாடு செய்தல்:
ஒருவரின் பேஸ்புக் பதிவு மற்றொருவரை பாதிப்பதாக, ஒரு மதத்தை இழிவு படுத்துவதாக, ஒரு கூட்டத்தாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக, வெறுப்பு பேச்சுகளை கொண்டதாக, இன அல்லது பால் பாகுபாடு கொண்டதாக, ஆபாச காட்சிகளை கொண்டதாக இனவாதம் / மதவாதம் என்பவற்றை தூண்டும் வகையில் அமையுமானால் அவற்றுக்கெதிராக பேஸ்புக் பாவனையாளர்களே முறைப்பாடுகளை மேற்கொள்ள பேஸ்புக் இடமளித்துள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் பொழுது, அந்த பதிவுகள் பேஸ்புக் சமூக தரநிலைகளை மீறுவதாக இருந்ததால் பேஸ்புக் அவற்றை நீக்கிவிடும். ஒரு பதிவுக்கு எதிராக பலர் இவ்வாறு முறைப்பாடு செய்யும் போது, குறித்த பதிவை இட்டவரின் பேஸ்புக் கணக்கை தடை செய்யக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றது. எனினும் இது மிகவும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது சந்தேகமானதே. பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாத தரவுகளின் படி பேஸ்புக் ஊழியர்களின் எண்ணிக்கை 33,606 ஆகும். 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கணக்குகள் கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களால் அந்த அனைத்து கணக்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பக்கங்கள், குழுக்கள் என்பவற்றை கண்காணிப்பது நடைமுறை சாத்தியமானது அல்ல.

பேஸ்புக் தவரிழைக்கின்றதா?
இதற்கு சிறந்த உதாரணமாக இவ்வருட ஆரம்பத்தில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்ததை குறிப்பிடலாம். இந்த வன்முறை சம்பவத்தின் போது பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடக வதந்திகளை பரப்பி அவற்றின் மூலம் மக்களை வன்முறைக்கு தூண்டும் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றது. குறிப்பாக சிங்கள மொழியில் பதிவிடப்பட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்திருந்தன. இதுதொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் தவறியது.

இதனை அடுத்தே அவ்வூடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாத இறுதியில் லண்டனில் இடம்பெற்ற போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்றின் போது பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை தீர்வுகள் தொடர்பான பிரதித்தலைவர் ரிச்சட் அலனிடம் இது தொடர்பில் வினவப்பட்டது. சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சிரேஷ்ட அமைச்சருமான எட்வின் டொங் அவரிடம் கேள்வி எழுப்பினார். இலங்கையில் இடம்பெற்ற வன்முறையின் போது இலங்கை தொலைதொடர்பு

அமைச்சர் பேஸ்புக் நிறுவனத்துக்கு முறைப்பாடு செய்தும் குறித்த பதிவு நீக்கப்படவில்லை என சிங்கப்பூர் அமைச்சரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த பேஸ்புக் உயரதிகாரி “நாம் தவறு செய்கிறோம்… பாரதூரமான தவறுகள்; தவறுகளை குறைப்பதே எமது பொறுப்பு” என பதிலளித்துள்ளார். இதேவேளை, “பேஸ்புக் ஊழியர் என்றவகையில், இவ்வாறு நடைபெறக்கூடாத விடயங்கள் நடைபெறுவதையிட்டு நான் வெட்கப்படுகிறேன்” என பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கை தீர்வுகள் தொடர்பான பிரதித்தலைவர் ரிச்சட் அலன் மேலும் பதிலளித்துள்ளார்.

trh_manipulation_artwork1_wide-b3b9648e2f6fb9a829cc1d800adf7dada2e5f57e-s800-c85ஊடக கையாளுதல் (Media Manipulation):
தற்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடக பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இளம் வாக்களர்களை இலக்காக கொண்டு சமூக ஊடகங்களையே பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகின்றன. அவற்றிலும் நேரடியாக அல்லாமல் மறைமுகமான அடிப்படையிலும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் வெற்றியும் கண்டுள்ளனர். இதில் குறிப்பாக
எதிர் தரப்பினர் தொடர்பான போலி தகவல்கள் மற்றும் செய்திகள் பரப்பபடுகின்றன.

இதன் ஊடாக வாக்களர்களை தம் வசம் கவர்ந்துகொள்கின்றனர். இதனால் உண்மை நிலைமை மாற்றப்பட்டு திரிவுபடுத்தப்பட்ட ஒரு நிலைமை உருவாகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே வாக்காளர்கள் வாக்களிப்பை மேற்கொள்வர். இதன்போது உண்மையல சூழ்நிலை மறைக்கப்பட்டு வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் இல்லாமல் போகின்றன. இந்த பிரச்சார நடவடிக்கைகளின் போது போலி தகவல்கள் பரவுவதை தடுப்பது சமூக ஊடகங்களின் பொறுப்பாகும். எனினும், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் திறக்கப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். இதன் போது அவற்றை கையாள்வது கடினமான காரியமாகும்.

பேஸ்புக் தொடர்பான சர்வதேச விசாரணையின் போது, தேர்தல் காலங்களில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பேஸ்புக்கின் கொள்கை தீர்வுகள் தொடர்பான பிரதித்தலைவர் ரிச்சட் அலன், தேசிய ரீதியான தேர்தல்களின் போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த ஊடக கையாளுதல் நிலைமை தேர்தலின் போது மட்டுமல்லாமல் அன்றாட விவகாரங்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக வர்த்தக மேம்படுத்தல்களை இந்த வகைக்குள் குறிப்பிடலாம். ஒரு பொருளின் மீதுள்ள அல்லது சேவையின் மீதுள்ள தனி மனித அபிப்ராயத்தை மாற்றி அவர்களை, வேறொரு பொருள் மீது அல்லது சேவை மீது திசை திருப்புவதனை குறிப்பிடலாம். அதற்காக வர்த்தக உத்திகளை பயன்படுத்தி மக்களை திசை திருப்புகின்றனர். இவை சமூக ஊடகங்கள் ஊடாக எம்மை அறியாமலேயே எமக்குள் ஊடருத்துள்ளன.

எனவே, பேஸ்புக் சமூக தரநிலைகள் மற்றும் மனித விழுமியங்களுக்கு முரணான செய்திகள், தகவல்கள், படங்கள் அல்லது காணொலிகள் பதிவேற்றப்படும் போது அவற்றை பார்த்துவிட்டு அதற்கெதிராக அதிருப்தியை வெளியிடுவது மாத்திரம் அல்லாமல் அவற்றுக்கெதிரக முறைப்பாடு செய்யவேண்டும். இதன்மூலம் அவற்றை நீக்கிவிடக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அதேபோன்றுதான் போலி தகவல்கள், போலி செய்திகளை இனம்கண்டு அவற்றின் மூலம் நாம் திசை திருப்பப்படாமல் உருதிப்படுத்திகொள்ளல் வேண்டும். மேலும் அவற்றுக்கெதிராக முறைப்பாடு செய்வதன் மூலம் அவற்றை நீக்கிவிடச் செய்யலாம். அகவே, சமூக ஊடகங்களின் திறந்த தன்மை நன்மையாக அமைவது போன்றே, அவை பாதகமான காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இதனை அறிந்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

– நுஸ்கி முக்தார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>