
ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் மற்றும் அப்ரார் பவுண்டேஷன் என்பன இணைந்து ஏற்பாடு செய்த டாக்டர் றயீஸ் முஸ்தபா எழுதிய “எனது டயறியின் மறுபக்கம்” நூலின் இரண்டாம் பாகம் மற்றும் டாக்டர் றயீஸின் மகள் தூபா றயீஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுதிய “எனது டயறியின் மறுபக்கம்” நூலின் முதலாம் பாகத்தினுடைய நூல் வெளியீட்டு விழா கடந்த 2108.12.23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மகாவலி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அல்ஹஸனாத் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி) வரவேற்புரை நிகழ்த்தினார். எனது டயறியின் பறுபக்கம் இரண்டாம் பாகத்தின் நூல் மதிப்புரையை ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவித் தலைவர்களுள் ஒருவருமான் அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனீபா வழங்கினார். தூபா றயீஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எனது டயறியின் பறுபக்கம் முதற் பாகத்திற்கான நூல் மதிப்புரையை சிரேஷ்ட சட்டத்தரணி ஜாவித் யூஸுப் வழங்கினார். நான் ஏன் எனது தந்தை எழுதிய தமிழ் நூலை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தேன் எனும் தலைப்பில் தூபா றயீஸ் சிற்றுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மத் ஆகியோருடன் வைத்திய நிபுணர்கள், தனவந்தர்கள், துறைசார்ந்தோர், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியரின் மாமனார் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களுக்கு நூலாசிரியர் டாக்டர் றயீஸ் முஸ்தபா நூலின் முதல் பிரதியை வழங்கி வைத்தார்.
அல்ஹஸனாத் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட டாக்டர் முஸ்தபா றயீஸுடைய எனது டயறியின் மறுபக்கம் நூலின் முதல் பாகம் 12 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் றயீஸ் முஸ்தபா அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, ருஹுனு பல்கலைக்கழகத்தில் M.B.B.S. பட்டத்தைப் பெற்று, சிறுவர் நோய் நலத் துறையில் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டதுடன் அங்கு சிறுவர் மருத்துவத்தில் டிப்ளோமா பட்டத்தையும் மருத்துவத்தில் டாக்டர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.