புத்தர் சிலை உடைப்புக்கள் – இனமோதல்களுக்கு வழிவகுக்குமா?


imageproxy

கேகாலை மாவட்டத்தின் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்ற ஒரு தேர்தல் தொகுதியே மாவனல்லை.மாவனல்லை கடந்த சில காலங்களாக பல்வேறு இன முறுகல்கள் இடம்பெற்ற ஒரு பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2001 இல் மாவனல்லை நகரில் இன மோதலொன்று இடம்பெற்ற போதும் இங்கு வாழும் சிங்கள முஸ்லிம் மக்களிடையே நட்புறவு வளர்ந்தே வந்தது. மாவனல்லையை மையமாக வைத்து கோகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவாவதற்குச் சிங்கள மக்கள் பெரும் பங்களிப்பைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில் உள்ள மாவனலையில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற கசப்பான சில சம்பவங்கள் இன்று முழு நாடும் பேசுகின்ற ஒரு விடயமாக மாறியுள்ளது. மாவனல்லை கனேதன்ன பிரதேசத்திற்கு நெருங்கிய சிங்கள கிராமங்களிலுள்ள இரு புத்தர் சிலைகள் இனம் தெரியாத  நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளியன்று இடம்பெற்றிருந்தது.

கடந்த சனியன்று மாவனல்லையில் அமைச்சர் கபீர் ஹாசீம் ஏற்பாட்டில் நடைபெற்ற ஐ.தே.க பல மண்டலயவின் கூட்டத்திற்காகச் சுவரொட்டிகளை ஒட்டியவர்களே இதனைச் செய்தார்கள் அல்லது இந்தக் கூட்டத்திற்கு எதிரானவர்கள் இதனைச் செய்தார்கள் என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் புதனன்று காலை கடுகண்ணாவை அருகிலுள்ள தித்குருவத்த கிராமத்தில் இடம்பெற்ற புத்தர் சிலை தாக்குதல் இச்சம்பவங்களுக்குக் காரணம் யார் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

புதனன்று அதிகாலை பாஹல கடுகண்ணாவ தித்துருவத்த சந்தியிலுள்ள ஒரு புத்தர் சிலை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தர் சிலையை தாக்க வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மாவனல்லை பொலிஸாருக்கு கையளித்துள்ளனர். இந்த சம்பவத்துடன்  தொடர்புபட்டதாக கூறப்படும் இளைஞர் பலத்த தாக்குதலுக்குள்ளாகப்பட்டு மரமொன்றில் கட்டி வைக்கப்பட்ட பின்னரே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவருடைய கையொன்று உடைந்து மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து மாவனல்லை பிரதேசமெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கலவரங்கள் ஏற்படுமோ என்ற அச்சமும் உருவாகியது. பொலிஸார் கடந்த சில தினங்களாக மாவனல்லை பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தோடு தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர்கள் மாவனல்லை தெல்கஹாகொட என்ற முஸ்லிம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஏன் இதனைச்  செய்தார்கள் என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் காரணிகள் அல்லது சமய காரணிகள் உள்ளதா என்பது பற்றி கண்டறிவதற்கு பொலிஸ் உளவுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உளவுப்பிரிவினர் இப்போது மாவனல்லை பிரதேசத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதனன்று மாவனல்லை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவம் காரணமாக மேலும் வன்செயல்களற்ற ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது.

கொழும்புக்கு வெளியே இருந்த மாவனல்லை பிரதேசத்திற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் மாவனல்லைக்கு விஜயம் செய்து மாவன்லை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசேட கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கினார் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் மாவனல்லை பிரதேச செயலாளர் , பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த, இந்து, இஸ்லாமிய, மதத்தலைவர்கள், மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இச்சம்பவம் நடைபெற்ற மறுகணமே அமைச்சர் கபீர் ஹாசீம் டுவிட்டரில் பதிவொன்றை விடுத்திருந்தார். மாவனல்லையின் புத்தர் சிலையை சேதத்திற்குள்ளாக்கியதை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாதென்றும் தெரிவித்திருந்தார். சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சம்பவத்துடன்
தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் தலைமையில் மாவனல்லை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்ததோடு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகள் மதத்தலைவர்கள் அதிகாரிகள் எந்த வகையிலும் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்த இடமளிக்கப்போவதில்லை எனவும் வாக்குறுதியளித்தனர். அதன்படி புதன் இரவு எந்தவிதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை என பொலிஸார்  தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் ஒருவர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பிரமுகர் ஹஜ்ஜூல் அக்பரின் சகோதரரின் மகனாவார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஹஜ்ஜூல் அக்பரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு புதனன்று அழைத்துசென்றனர்.

முற்பகல் 11 மணியளவில் பொலிஸார் மாவனல்லை முருகதலாவிலையிலுள்ள உள்ள இவரது வீட்டுக்குச் சென்று இவரை அழைத்துச் சென்றனர். நீண்ட நேரம் கேகாலை பொலிஸ் தலைமையகத்தில் இவர் வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக உயர்மட்டத்திற்குக் கவனத்திற்கு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா கொண்டுவந்தது. சம்பவத்துடன் தொடர்பற்ற நாட்டின் முக்கிய ஆன்மீக அமைப்பின் முன்னாள் தலைவரை  இவ்வாறு வைப்பது தொடர்பாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. உயர் மட்ட தலையீட்டை அடுத்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இரவு 8 மணியளவில் அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் உடுநுவர தேர்தல் தொகுதியில் இரு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது. வெலம்பட பொலிஸ் பிரிவின் லேயங்காவல எனும் இடத்திலும் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இதை யார்  செய்தார்கள் என்பது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புத்தர் சிலை உடைக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுகணமே கொழும்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தியின் தலைமையில் கூடி ஆராய்ந்தது. உடனடியாக ஜனாதிபதிக்குப் பிரதமருக்கும் பொலிஸ் மா அதிபருக்கு ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் மௌலவி  எம்.எம். எம் முபாரக் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதங்களை அனுப்பி வைத்தார்.

மேலும் மாவனல்லை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள சமய நிந்தனைக்கான செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்கள் வழிபடக்கூடிய புத்தரின் சிலைகளைச் சேதம் செய்தமை இனங்கள் மத்தியிலுள்ள சௌஜன்யத்தையும், புரிந்துணர்வுகளையும் இல்லாமல் செய்துவிடும் செயலாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா காண்கிறது. இவ்வாறு சிலைகளை சேதம் செவதோ, அல்லது அவற்றை இழிவுப் படுத்துவதோ இஸ்லாமிய போதனைகளல்ல என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்நாட்டில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பேதமின்றி ஐக்கியமாகவும், புரிந்துணர்வுடனும் தத்தமது சமயப்போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடும். எனவே இவ்விடயத்தை யார் மேற்கொண்டிருந்தாலும் அவர்களைச் சட்டத்தின்  முன் நிறுத்தி அவர்களுக்குரிய தீர்ப்பை உரிய முறையில் வழங்கி இத்தகைய செயல்கள் இனிவரும் காலங்களில் நடை பெறாத வண்ணம் இருக்க ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதனை காரணமாக வைத்து வன்முறையைத் தூண்டுவதை தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கேட்டுள்ளது.

இதேவேளை புத்தர் சிலையைச் சேதப்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமாறு புதுகல ஜனவங்க தேரோ ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மாவனல்லையை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஒருவரை பொதுமக்கள் பொலிஸில் பிடித்து ஒப்படைத்துள்ள நிலையில் புதுகல ஜனவங்க தேரோ ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற சம்பவங்களில் ஒருவரோ அல்லது சிலரோ தொடர்புபட்டிருந்தாலும் கூட இதனால் சமூகங்களுக்கு இடையே இனமுறுகல்கள் ஏற்பட்டு பாரிய அழிவுகளைக் கொண்டுவரலாம் என்பதால் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை ஊடாக உச்சக்கட்ட தண்டனையை வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்துவத்தவில் உடைக்கப்பட்ட புத்தர் சிலை வியாழனன்று காலை செப்பனிடப்பட்டது பெருந்தொகையான பௌத்த பிக்குகள் உட்பட பிரதேச மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

உயிரைத்துச்சமாக மதித்தே சிலை உடைத்தவரைப்பிடித்தேன்.

இச்சம்பவத்தினால் கைது செய்யப்பட்டவர் அலுபர் அஹமத் (30) என மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர். மாவனல்லை கண்டி எல்லையில் அமைந்துள்ள திதிருவத்த என்ற இடத்தில் உள்ள புத்தர் சிலையைத்தாக்கிய போதே பிரதேசவாசிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

இது குறித்து ஏ.எம். செனரத் பண்டார(39) கூறியதாவது; நான் அதிகாலை முச்சக்கரவண்டியில் ஹயர் ஒன்று போகவிருந்தேன். கடுகண்ணாவை சந்தியிலே வழமையாக நான் இருக்கின்றேன். அதிகாலை 3.30 மணியளவில் விழித்துப்பார்க்கும் போதே புத்தர் சிலை பக்கத்திலிருந்து சத்தம் ஒன்றுவந்தது. வெளியே வந்து பார்க்கும் போது சிலைக்கருகே இருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் விரைவாகச் செல்வதனை அவதானித்தேன். அங்கு சென்று பார்த்ததும் சிலை உடைக்கப்பட்டிருப்பதனைக்கண்டேன்.

அதன்பிறகு அருகிலுள்ள வீட்டில் சைக்கிள் உள்ள தம்பியை எழுப்பி அவருடன் போய்ப்பார்ப்போம் என்று கூற சைக்கிள் சென்றவர்கள் எமது பக்கம் ஓடி வந்தார்கள் என்னைக்கண்டதும் சைக்கிளைத்திரும்பினார் நான்  சைக்கிளைத்திரும்பியதுடன் அவர்களிருவர் மீதும் பாய்ந்ததும் அவர்களுடனேகாட்டுக்கு விழுந்தோம். மற்ற தம்மி மற்றப்பொடியனையை பிடித்து மல்லுக்கட்டும்போது அவரை பள்ளத்தாக்கு தள்ளிவிட்டார் ஒருவரைப்படித்து சைக்கிளுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

நான் மிகவும் சிரமப்பட்டு ஊரவர் எல்லோரும் சேர்ந்தே இந்த புத்தர் சிலையை நிர்மாணித்தோம் மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததனாலேயே விழிப்பாக இருந்தோம். எனவே தான் மரணித்தாலும் பரவாயில்லை என்று வேளையில் இறங்கினோம். பஜாஜ் டிஸ்கவரி மோட்டார் சைக்கிளிலே இவர்கள் வந்தார்கள், இவர்களைப் பிடித்துக்கொடுக்கமுடிந்தது எமக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.

– என். எம். அமீன் –

2 comments

  1. உங்களது இப்படியானா பதிவுகள் நிச்சயம் ஏற்படுத்தும்

  2. Izi tevai illaza pazivi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>