மாவனல்லை சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன?


8NBgPID

மாவனல்லையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் புத்தர் சிலை மீதான தாக்குதல், நாட்டில் மீண்டுமொரு பதட்டத்தை ஏற்படுத்துமோ என்ற கவலையை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளபோதும், சிவில், சமயத் தலைமைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி நம்பிக்கை தருகின்றது.

இந்த நாடு மட்டுமன்றி, உலகில் பல இனங்களும், பல மதங்களும் வாழ்கின்ற நாடுகளில் இவ்வாறான இன, மத முரண்பாட்டுச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாது. ஆயினும், இலங்கையில் கடந்த அரை தசாப்தத்துக்குள் சடுதியாக ஏற்பட்ட முரண்பாடுகள் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டதாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் நிதானமாகவும், நாட்டின் சட்டத்தை மதித்தும் வாழ வேண்டியது ஒவ்வொரு நபர் மீதுமான கடமையாகும். நாட்டில் ஏற்படும் இன, மத முரண்பாடுகள் ஒவ்வொரு தனிநபரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் தன்மை கொண்டதாகும். அது  உளவியல் தொடக்கம் பொருளாதாரம் வரை நீள்கின்றது.

நாம் கடந்த 1000 க்கும் மேற்பட்ட வருடங்களாக இலங்கையில் மேற்கொண்டு வரும் சகவாழ்வு பாதிப்புறாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எவருக்கும்  தொந்தரவில்லாத வகையில் நாம் செயற்பட வேண்டும்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இளைஞர்கள் குறித்து பெற்றோர் அதிக கரிசனையுடன் இருக்க வேண்டும். தமது பிள்ளைகளின் நண்பர்கள் யார், என்ன மாதிரியானவர்கள் என்று விழிப்புடன் பெற்றோர்கள்  இருக்க வேண்டும். இன்னுமொரு புறத்தில் மாவனல்லை சம்பவத்துக்கு முழுச் சமூகமுமே பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டில்
இல்லை. ஏனெனில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சிவில், மார்க்கத் தலைமைகள், நிறுவனங்கள் அனைத்துமேஇவ்வாறான இழி செயல்களை மிகக் கடுமையாக எதிர்க்கின்றன.

இஸ்லாத்தின் போதனைகள் சகவாழ்வையே ஊக்குவிக்கின்றது. சக மனிதன் வணங்கும் கடவுள்களை ஏசுவதைக்கூட இஸ்லாம் தடுக்கின்றது. அல்லாஹ்வே அதை அல்குர்ஆனில் வலியுறுத்திக் கூறுகிறான். இவ்வாறான நிலையில், முஸ்லிம் சமூகத்திலுள்ள ஓரிரு நபர்கள்  இழைக்கும் குற்றங்களை முழு சமூகத்தின் மீதும் சுமத்துவதும் பொருத்தமானதல்ல.

இலங்கையில் கடந்த காலங்களில் இஸ்லாம் குறித்து மிகவும் மோசமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தபோதும், சிவில், மார்க்கத் தலைமைகளில் மிகவும் அறிவுப்பூர்வமாக செயற்பட்ட, பெரும்பான்மை தலைவர்களையும், மக்களையும் அணுகி, அவற்றுக்கான தெளிவுகளை  வழங்கினர். இது ஓரளவு அவர்கள் மத்தியில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவ்வாறான வழிமுறைகளின் மூலம் தான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்பிராயங்களை அகற்ற வேண்டும். மாறாக, இஸ்லாம் தவறாகப் புரியப்படும் வகையில் செயற்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.

நாம் மாவனல்லை சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது போன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். இந்த விடயத்தில் மாவனல்லைப் பிரதேச பௌத்த மக்கள் ஆத்திர அவசரப்படாது நிதானமாகச் செயற்பட முற்பட்டிருப்பதனைப் பாராட்டியாக வேண்டும். அமைச்சர் கபீர் ஹாசிமும் மிக நிதானமாக இந்த விடயத்தைக் கையாண்டு வருகிறார். முஸ்லிம் பெற்றார்கள் தம் பிள்ளைகள் தீவிரவாதப் பக்கம் போக முற்படுவது குறித்து விழிப்புடனிருப்பதனை மாவனல்லைச் சம்பவம் உணர்த்துகின்றது.

– என்.எம். அமீன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>