போதைக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கையைப் பாராட்டுவோம் !


download (1)

சட்டம் ஒழுங்கு அமைச்சின் பொறுப்பை எடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் வியாபாரத்தை அழிக்கும் நடவடிக்கையை துணிச்சலுடன் முன்னெடுத்து வருவது நாட்டு மக்கள் அனைவரினதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துடன் மாத்திரமே இந்தப் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது பெரும்பாலான அரசியல் அவதானிகளின் கருத்தாகும். போதைப் பொருள் வியாபாரத்தையும் அதன் வலையமைப்பையும் இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது என்பதில் இரு கருத்துக்கள் கிடையாது.

அண்மைக் காலமாக பிடிக்கப்படும் போதைப் பொருட்களும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் கைதுகளும் மக்களிடம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளது.

இதேவேளை, அடுத்த இரு வாரங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்திகளை ஒழிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். போதைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.

இதற்காக வேண்டி விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இரு தரப்புக்களினதும் ஒத்துழைப்பு இதற்காகவேண்டி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும், கிராமத்திலிருந்து சட்டவிரோத மதுசாரத்தை இல்லாதொழிப்பது தனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

எல்லா மதுபானங்களும் பொதுவாகவே போதையை ஏற்படுத்தக் கூடியன. புத்தியை சிதைக்கக் கூடியன. நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியன. இன்னும் இதன் விபரீதங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இப்படியான மதுபானத்தை வகைப்படுத்தி ஒன்றுக்கு அனுமதியைக் கொடுத்து சட்ட ரீதியானது என்றும், மற்றதை சட்ட முரணானது என்றும் கூறுவது பகுத்தறிவுக்கு பொருத்தமற்ற ஒன்றாகும்.

நாட்டில் மதுபானக் கடைகளுக்கு பகிரங்கமாக அனுமதிப் பத்திரம் கொடுத்துவிட்டு  போதையினால் ஏற்படும் பாதிப்பை ஒழிக்க முடியாது என்பது பொதுவாக எல்லோரும் உடன்பாடு காணும் ஒரு கருத்தாகும்.

ஜனாதிபதியின் திட்டம் வெற்றியளிக்க ஒத்துழைப்பு வழங்குவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். அதேபோன்று, நாட்டு மக்களை மதுவிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், நகர்களிலுள்ள மதுபான சாலைகளும் முற்றாக துடைத்தெரியப்பட வேண்டும். ஒரு சில தினங்களில் மதுபான சாலைகளை கலால் திணைக்களம் மூடிவிடுவதனால், இளைஞர்கள், முதியவர்கள் குறிப்பாக பெண்கள் ஆகியோரிடத்தில் மதுபான பயன்பாட்டை நீக்கிவிட முடியாது.

மதுபானம் இல்லாத ஒரு தேசமும், மதுவை வெறுக்கும் மக்களும் கொண்ட தேசமாக எமது நாட்டை மாற்றுவதற்கு ஜனாதிபதி அடுத்த தீர்மானத்தை எடுப்பாராயின் நாட்டிலுள்ள மதுவினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பமும் ஜனாதிபதிக்கு மலர் மாலை போடக் காத்திருக்கின்றார்கள் என்பது மயிர் சிலிர்க்கும் உண்மையாகும். இதுவே ஆரோக்கியமான நாட்டை நோக்கிய பயணத்தின் முக்கிய அடியாகவும் காணப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு, போதைக்கு எதிரான சிந்தனையைக் கொண்ட சகல அமைப்புக்களும் கூடிய நின்று ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். நற்பணிகள் யார் மூலம் இடம்பெற்றாலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பழக்கமே நாட்டை நேசிக்கும் பற்றாளர்களின் பணியாகும்.

இந்த நடவடிக்கையின் முழுமைத் தன்மையை நோக்கிப் பயணிப்பதற்கான ஆதரவுகளை வெளிப்படுத்துவதுடன், பாராட்டுக்களுடன் ஆலோசனைகளையும் முன்வைக்க ஒரு சந்தர்ப்பமாக இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதுமே மதுவை எதிர்க்கும் அமைப்புக்களின் காத்திரமான நடவடிக்கையாகலாம்.

சகல மதங்களும் ஒருமித்த குரலில் எதிர்க்கும் மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் என்பவற்றை இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கூடிநின்று ஒழிப்பதற்கு முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்.  (மு)

– எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>