ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னால் பொதிந்துள்ள உண்மைகள்- ஓரு விரிவான பார்வை


church-attack-for-new-top-1140x570

ஏப்ரல் 21, காலை 8.30 மணியளவில் இலங்கையின் சில தேவாலயங்களையும், பிரபல ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் வருந்தத் தக்கதுமாகும். தாக்குதலை மேற்கொண்டவர்களும், அதன் சூத்திர தாரிகளும் சந்தேகத்திற்கிடமின்றி பயங்கரவாதிகளே. இறை நிந்தனைக்குரியவர்களே.

இத்தாக்குதலுக்கு இலக்காகியவர்கள் அப்பாவிப் பொதுமக்களாவர். அவர்களுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். ஆருதல் கூற வேண்டும். அவர்களைத் தேற்றுவதில்; நியுசிலாந்துப் பிரதமரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். இனமோ மதமோ பாராமல் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கும் புலனாய்வுத் துறைக்கும் உதவுவது நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் கடமையாகும்.

இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றால் அதுபற்றிய பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் பரவுவது சகஜம். அவை தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம் பொதுமக்களை இலக்கு வைத்த இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏன் இடம்பெறுகின்றன, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் குரூர சூத்திரதாரிகள் யார், இத்தாக்குதல்கள் மூலம் அவர்கள் எதை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்; என்பது பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டும். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு நாட்டில் இடம் பெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்நாட்டினது சமகால சமய, சமூக, அரசியல் சூழ்நிலைகளுடன் தொடர்பிருப்பது போலவே பூகோளமயமாக்கல் காரணமாக சர்வதேச நோக்கங்களுடனும் அத்தாக்குதல்களுக்கு தொடர்பிருக்கலாம் என ஊகிப்பது நியாயமான ஒன்றாக மாறியுள்ளது. இவ்வகையில் இலங்கையில் இடம் பெற்ற ஏப்ரல் 21 ஆம் திகதித் தாக்குதலின் தேசிய சர்வதேச பின்னணிகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இத்தாக்குதல் காரணமாக அப்பாவிப் பொது மக்கள் பலியான போதிலும் அதன் சூத்திர தாரிகளால் தூர நோக்கில் இஸ்லாமும் முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்பட்டனரா? என்பதும் ஒரு கேள்விக் குறியாகும். காரணம் இன்று இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் பிழையான அபிப்பிராயங்களையும் வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு முக்கியமான சில சர்வதேச சக்திகள் முயற்சித்து வருகின்றன
.
தாக்குதல் குறித்து சரியான முடிவுக்கு வர பின்வரும் நான்கு பரிமாணங்களில் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டும்.

1. தாக்குதல் நடாத்தியவர்கள் 
2. உள்நாட்டு அரசியல் நிலை
3. வெளிநாட்டு வலைப்பின்னல்
4. முஸ்லிம் சமூகம்

தாக்குதல் நடத்தியவர்கள்:

தாக்குதல் நடாத்தியவர்கள் உள்நாட்டைச் சேர்ந்த ISIS என்ற தீவிரவாதக் குழுவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் என ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன் தலைவர் ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், ஜனநாயகம் சகவாழ்வு பற்றி பேசும் ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்களையும் ஜாமியா நளீமியா போன்ற கலா நிலையங்களையும் கடுமையாக விமர்சிப்பவராகவும் அவைபற்றி நச்சுக் கருத்துக்களைப் பரப்புபவராகவும் இருந்தார்.

இவர் நாட்டில் இடம்பெற்ற இரு கலவரங்களையும் பௌத்த தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜிஹாத் முழக்கம் செய்தார். ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். தீவிர சிந்தனைப் போக்குடைய சில இளைஞர்கள் இவரது அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஸஹ்ரான் ஹாஷிம் சார்ந்தவர்கள் சர்வதேச ISIS பயங்கரவாதிகளின் செயல்களை நியாயம் காண்பவர்களாகவும் அதற்கு ஆதரவளிப்பவர்களாகவுமே இருந்து வந்தனர். இவர்கள் பற்றிய முழுமையான உளவுத்தகவல்களும் தேசிய சர்வதேச உளவுத்துறையினரிடம் காணப்படுகிறன. அதற்கு மத்தியில் இவர்கள் மாவனல்லைப் பகுதியல் நடந்த சிலை உடைப்பு விடயத்திலும் சம்பந்தப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். பிரதானமானவர்கள் மர்மமாக மறைந்தனர். இது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

தொடர்ந்து வெளியிடப்பட்ட புலனாய்வு, புலன்விசாரணை அறிக்கைகளில் ஓரிரு இடங்களில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சிலர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தன. தொடர்ந்து புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது,  முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் வெறுப்பைப் பெற்ற, புலனாய்வுப் பிரிவின் கடும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்த அமைப்பினால் நன்கு திட்டமிடப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலை எவ்வாறு செய்ய முடிந்தது என்பது அதிர்ச்சியான ஒன்றாகும். இது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

ஐ.எஸ்.எஐ.எஸ். அமைப்பை ஆதரிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் வசதியான மேலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்கள். படித்தவர்கள். ஆங்கில மொழியோடு பரீட்சயமானவர்கள். என்றாலும் இவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் இவர்கள் தீவிர வாத சிந்தனைகளினால் கவரப்படுவதற்கு சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. அதைக் கண்டறிந்து சமூகத்திறகு வழிகாட்டல் வழங்குவது பொறுப்பானவர்களின் கடமையாகும்.

உள்நாட்டு அரசியல் நிலை:

இலங்கையில் உள்நாட்டு அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமையினை அண்மைக்கால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வங்குரோத்து அரசியல் சூழ்நிலை காரணமாக குறிப்பிட்ட சில நாட்களாக நாட்டின் பிரதமர் யார் என்பதே மக்களுக்கு குழப்பமாக இருந்தது. பாராளுமன்றத்தில் ஒழுங்குகள் மீறப்பட்டன. வெளிநாடுகளில் இலங்கையின் நட்பெயர் கேலிப்பேச்சாகியது.

அமைச்சர்கள் கட்சி மாறுவதும், பணத்துக்காக விலைபோவதும் இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாவை. அதுமட்டுமல்ல, ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக அதைத் தக்க வைப்பதற்காக தீவிரவாதக் குழுக்களைப் பயன்படுத்தல், அரசியல் படுகொலைகள் செய்தல், போதைப் பொருள் வியாபாரம் எனப் பல்வேறு குற்றச் செயல்களுடன் இவர்களுக்குத் தொடரபிருப்பதாக நாட்டு மக்களிடையே நீண்டகாலமாக சந்தேகங்கள் நிலவி வருகின்றன.

இலங்கை அரசியலில் வெளிநாட்டு அழுத்தங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால் நாட்டினதும் நாட்டு மக்களினதும் இறைமை கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கையின் இந்நிலை முக்கியத்துவம் காரணமாக இங்குள்ள அரசியல் குழப்பநிலையை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகள் இங்கு சதுரங்கம் விளையாட களமமைத்து வருகின்றமை பற்றி அரசியல் அவதானிகள் பேசிவருகின்றனர்.

வெளிநாட்டு வலைப்பின்னல்கள்:

இலங்கையில் காணப்படும் இனங்கள், அரசியல் கட்சிகள், சமயப் பிரிவுகள், சமூக சேவை அமைப்புக்கள் எனப் பலவும் வெளிநாட்டு வலையமைப்புக்ளுடன் தொடர்பு பட்டுள்மை அனைவரும் அறிந்த விடயம். இவை தொடர்பில் நாட்டு மக்களிடையே பரஸ்பர சந்தேகங்களும் அச்ச உணர்வும் காணப்படுகின்றன.

உதாரணமாக ISIS வலையமைப்புடன் முஸ்லிம்களுக்கு தொடர்பிருக்கிறது என்று பெரும்பான்மை பௌத்தர்கள் சந்தேகிக்கின்றனர். பௌத்த தீவரவாத அமைப்புக்களுக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் மியன்மாரில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த விராதுவின் வலையமைப்புடன் தொடர்பிருக்கலாம் என முஸ்லிம்கள் சந்தேகிக்கின்றனர். அஞ்சுகின்றனர்.

பல வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட, கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்த இஸ்ரேல் ஆதரவுப் பேரணியைக் காட்சிப்படுத்திய காணொளி இலங்கையில் ஸியோனிஸ வலைப்பின்னல் செயற்படுகிறது என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியது. யூத ஸியோனிஸ சக்கிகள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக சர்வதேச மட்டத்தில் செயற்படுகின்றமையே இவ்வச்ச உணர்வுக்கான காரணமாகும்.

எவ்வாறாயினும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்டதாக ISIS வலையமைப்பே சந்தேகிக்கப்படுகிறது. எனவே ISIS இன் பின்னணி பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இது ஈராக்கில் அமெரிக்காவினால் தினிக்கப்பட்டு அந்நாட்டையும் அதன் குடிமக்களையும் பேரழிவுக்குட்படுத்திய யுத்தத்ததின் பின்னணியில் உருவான ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இவ்வியக்கம் உருவான புதிதிலேயே அது தான் ஆளப்போவதாக கற்பனை பண்ணிய சாம்ராஜ்யத்தின் வரைபடத்தை வெளியிட்டது. அதில் இலங்கையும் உள்ளடங்கியிருந்தது.

ISIS தன்னை அறிமுகம் செய்த போது கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி போன்ற பேரறிஞர்கள் இவ்வமைப்புக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சூழ்ச்சியாக இருக்கலாம் என்றும் உலக முஸ்லிம்களை எச்சரித்தனர். இலங்கையிலும் ஜம்இய்யதுல் உலமா உட்பட பல இஸ்லாமிய அமைப்புக்கள் இவ்வமைப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என இலங்கை முஸ்லிம்களை எச்சரித்தன.

இந்த ISIS அமைப்பினர் தம்மைச் சாராத அனைவரையும் இஸ்லாத்தின் எதிரிகள் என்றே பார்த்தனர். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாரும் சரியே. இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்பது அதன் அடிப்படைச் சித்தாந்தமாகும்.

ISIS, இஸ்ரேலின் உளவுப் பிரிவாகிய மொசாட் அமைப்பின் உருவாக்கம் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அவ்வமைப்பின் நடவடிக்கைகளால் பல முஸ்லிம் நாடுகள் அழிவுக்குள்ளாகின. சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்த விலை மதிப்பற்ற புராதன இஸ்லாமியப் பொக்கிசங்களும் வரலாற்றுச் சின்னங்களும் அழிக்கப்பட்டன.

காட்டுமிராண்டியர்களான இவர்களைக் காரணம் சொல்லி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முஸ்லிம் நாடுகளுக்குள் தமது இராணுவத்தையும் உளவாளிகளையும் அனுப்பி வைத்தன. அமெரிக்க தலைமையிலான இவற்றின் செயற்பாடுகள், மத்திய கிழக்கில் நிலவும் சர்வாதிகார ஆட்சிக்குப் பதிலாக ஜனநாயக அரசியலை வேண்டிப் போராடும் இஸ்லாமிய அமைப்புக்களை இலக்கு வைத்தே செயற்பட்டன. இன்றும் செயற்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில், ISIS குறுகிய காலத்தில் பாரிய பிரதேசங்களை வெற்றிகொண்டது. இதனால் பேதமை கொண்ட முஸ்லிம் வாலிபர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் இவ்வமைப்பில் இணைய ஆரம்பித்தனர். இதனை முஸ்லிம் நாடுகளில் இருந்த அரசியல் சீர் கேடுகளும், பொருளாதாரப் பிரச்சினைகளும், யுத்தக் கெடுபிடிகளும் பேரினவாத செயற்பாடுகளும் ஜிஹாத் பற்றிய தப்பபிப்பிராயங்களும் துரிதப்படுத்தின. அக்காலத்தில் துருக்கிய அதிபர் எர்தூகான் பிரிதானிய உலவுப்படை ISIS க்கு ஆள்சேர்க்கிறது என்ற ஓர் உளவுத் தகவலை வெளியிட்டு மக்களை எச்சரித்தார்.

ISIS இஸ்லாத்திற்கு முரணான மிலேச்சத்தனமான வெட்கக்கேடான குற்றச்செயல்களை இஸ்லாத்தின் பெயரால் செய்வதும் பின்னர் அதைத் தாமே செய்ததாக ஏற்றுக் கொள்வதும் அவர்களது இயல்பாகும். இவர்களது இந்நடவடிக்கையினால் வீழ்ச்சியடைவது இஸ்லாமும் முஸ்லிம்களுமே என்பதை சிறுபிள்ளைகள் கூட அறிவார்கள்.

எனினும் ISIS இனால் இளைஞர்கள் கவரப்படுவதற்கு அவர்களது உயர் ரக ஆயுதங்கள், உயர் தரத்திலான மீடியா, அடுத்தடுத்த வெற்றிகள், முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் விதத்தில் செயல்பட்ட அதன் ஏஜன்டுகள் என பல காரணிகள் உள்ளன. இவை மேலும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று இவ்வமைப்பினால் நன்மை அடைந்து கொண்டிருப்பதெல்லாம் மனித குலத்தின் விரோதிகளான சியோனிஸ வாதிகளே. இந்த ISIS இனால் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களும் இலட்சக்கணக்கான முஸ்லிம்களும் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் எந்த ஒரு இஸ்ரேலியனும் கொலை செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாது முஸ்லிம் அல்லாதார் மத்தியில் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயமும் அதற்கு எதிரான பேரலையும் தோற்றம் பெற்றது.

முஸ்லிம் சமூகம்:

இஸ்லாம் என்ற மார்க்கத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டமே முஸ்லிம் சமூகம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாம் என்றால் அமைதி என்றும் பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கும் அவனது இயற்கை நியதிகளுக்கும் கட்டுப்படுதல் என்றும் பொருள்.

முஸ்லிம்கள் பல்வேறு நாடுகளிலும் பெரும்பான்மையினராகவும் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். முஸ்லிம்களுக்கு மூன்று புனிதஸ்தலங்கள் இருக்கின்றன. சஊதி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைந்துள்ள அவற்றைத் தரிசிப்பது இஸ்லாத்தின் சமயக் கிரியைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதனால் முஸ்லிம்கள் சர்வதேச உறவுடன் கூடியவர்களாகக் காணப்படுகின்றார்கள்

பலஸ்தீனத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்ற புனிதத் தலமும் அதைச் சுற்றியுள்ள பரந்த நிலப்பரப்பும் அருள்பாலிக்கப்பட்ட பூமி என்றும் புனிதப் பூமி என்றும் அல்குர்ஆன் கூறுகிறது. இவ்வாறே அப்பூமியை யூதர்களின் பழைய ஏற்பாடும் கிறிஸ்தவர்களின் புதிய ஏற்பாடும் அருள்பாலிக்கப்பட்ட பூமி எனக் கூறுகின்றன.  இம்மூன்று சமயங்களும் இப்ராஹீம் (ஏப்ரஹாம்) என்ற இறைத்தூதரின் குடும்பத்தில் இருந்து தோன்றியமை குறிப்பிடத்தக்தாகும்.

கி.பி 635 முதல் முஸ்லிம்களின் கீழ் இருந்து வந்த இப்பூமியில் மேற்கு நாடுகளின் ஒரு தலைப்பட்சமான ஆதரவில் 1948 மே 14 ல் இஸ்ரேல் என்ற யூதநாடு உருவாக்கப்பட்டது. பலஸ்தீனில் ஒற்றுமையாக வாழ்ந்த முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் அகதிகளாக்கப்பட்டார்கள். அன்று முதல் பலஸ்தீனம் சர்வதேசப் பிரச்சினைகளின் மையமாக மாறுகிறது.

இஸ்ரேல் மக்கா மதீனா உட்பட பல முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய அகன்ற இஸ்ரேல் சாம்ராஜ்யத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. முஸ்லிம்கள் பலஸ்தீனத்தையும் அவர்களது புனிதத்தலத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். இதனால் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு சர்வதேசப் பிரச்சினையோடு தொடர்பாகின்றனர். மனித குலத்தின் எதிரியாகிய ஸியோனிஸ வாதத்தின் நேரடி எதிரிகளாகின்றனர். அதன் அனைத்து சூழ்ச்சிகளினாலும் சூழப்படுகின்றனர்.

வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள்

மேலே கூறப்பட்ட பின்னணியோடு, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஊடகங்களில் வெளி வந்த தகவல்களைப் பார்க்கின்ற போது பல்வேறு சந்தேகங்கள் உருவாகின்றன. வெளிவந்த தகவல்களுள் சில வருமாறு

 • இருவாரங்களுக்கு முன்பே தாக்குதல் தொடர்பாகக் கிடைக்கப்பட்ட தகவல் குறித்து அமைச்சர்கள் குறிப்பிட்ட தகவல்கள்
 • தற்கொலைக் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுவோரில் ஸஹ்ரான் ஹாஷிமும் ஒருவர்
 • தாக்குதலுடன் தொடர்பானவர்களில் மாவனல்லைச் சம்பவத்துடன் தொடர்பான பிரதான சந்தேக நபர்களும் உள்ளனர்.
 • தாக்குதல் நடாத்தியவர்களின் உடலில் மாஷா அல்லாஹ் என பச்சை குத்தப்பட்டிருந்தது
 • தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதிகளான ISIS உடன் தொடர்பிருக்கிறது
 • ISIS பயங்கரவாதிகள் மேற்படி தாக்குதலைப் பொறுப்பேற்றனர்
 • இலஙகையின் தேசியக் கொடி உடனடியாக இஸ்ரேலில் ஒளிவிளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டது.
 • நியுசிலாந்து சம்பவத்திற்கு பதிலடியாகவே தேவாலயங்களில் தாக்குதல் நடாத்தப்பட்டது.
 • இலங்கைக்கு உதவ அமெரிக்கா உட்பட பல சர்வதேச சக்திகள் முன்வரல்

இத்தகவல்கள் ஏற்படுத்தும் ஐயங்கள் வருமாறு..

தாக்குதல் பற்றிய செய்திகள் கிடைத்தும், உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தமைக்கான காரணம் பிரதான அரசியல் சக்திகள் சில இத்தாக்குதல் இடம்பெற வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்துள்ளனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

சந்தேக நபராகக் கருதப்படுகின்ற ஸஹ்ரான் ஹாஷிம், தீவிரவாத சிந்தனைப் போக்குடையவர் என அறியப்பட்ட நிலையிலும் இதுவரை கைது செய்யாமல் இருந்ததற்கான காரணமும் மாவனல்லைச் சம்பவத்துடன் தொடர்பான முக்கிய நபர்களின் மர்மமான மறைவும் இவர்களை மேற்படி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடுத்துவதற்கான ஒரு திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தாக்குதல் நடாத்தியவர்களின் உடலில் மாஷா அல்லாஹ்; என பச்சை குத்தப்பட்டிருந்ததனால் அவர்கள் பொதுவாக முஸ்லிம்களாக, குறிப்பாக இலங்கை முஸ்லிமகளாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதைத் துணிந்து கூறலாம். மேலும் இது இஸ்லாத்தைக் கேவலப்படுத்தும் ஒரு செயலுமாகும்.

மேற்படி தாக்குதலுடன் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பிருப்பின், தம்மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கான ஒரே வழி இன்னொரு சாராரை சந்தேகிக்கும் விதத்தில் தாக்குதலை நடாத்துவதாகும். இவ்வகையில், கிறிஸ்த்தவர்களின் அதிவிஷேட தினமொன்றில் தேவாலயங்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றி கேள்விப்படும் எவரும் நியுஸிலாந்து சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு அதற்குப் பழிக்குப் பழியாக முஸ்லிம்கள் இதைச் செய்திருக்கலாம் என எண்ணுவது நியாயமானதே. எனவே சூத்திரதாரிகள் மிகப் பொருத்தமான ஒரு நாளைத் தெரிவு செய்துள்ளார்கள்.

மார்ச் 15 நியுஸிலாந்துப் படுகொலைகளும், ஏப்ரல் 21 இலங்கைப் படுகொலைகளும் ஒரே மூளையால் திட்டமிடப்பட்டவைகளாகவும் இருக்கலாம்.

நியுஸிலாந்து சம்பவம் நிகழ்ந்து ஏறத்தாள ஒரு மாத காலத்திற்குள் அதற்குப் பழிவாங்கும் முகமாக கடும் கண்காணிப்பின் கீழ் உள்ள ஒரு சிறிய குழுவினரால் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதலை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நடாத்துவது முக்கியஸ்த்தர்களின் உதவி இன்றி சாத்தியமாகுமா? இதுவும் ஒரு சந்தேகமே.

தாக்குதலை ISIS பொறுப்பேற்றதனால் பின்வரும் யூகத்திற்கு வர முடியும்.

 • சில சர்வதேச அழுத்தங்கள், ஸஹ்ரான் ஹாஷிம் போன்ற பயங்கரவாத அமைப்பின் முக்கியமான உள்நாட்டு உறுப்பினர்கள் கைது செய்யப்படாமல் இருந்ததற்குக் காரணமாக இருக்கலாம்
 • அவர்கள் அந்த வெளிநாட்டு சக்திகளின் பாதுகாப்போடு பாரிய தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டிருக்கலாம்.
 • உளவு அமைப்புக்கள் இதுபற்றி முன்னறிவுப்புச் செய்தமை வெளிநாட்டு சக்திகளின் திட்டமிடலின் கீழ் நிகழ்ந்த நாடகமாக இருக்கலாம்.
 • நாட்டின் அதிமுக்கியமானவர்களுக்கு இவ்வுளவுத் தகவல்கள் வழங்கப்படாமை அரசாங்கம் பற்றிய அதிருப்தியை ஏற்படுத்தி ஆட்சிமாற்றத்திற்கு துணை செய்வதாக அமையலாம்.
 • மொத்தமாகச் சொல்வதானால் குறிப்பாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கான சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

தாக்குதலால் நன்மை அடைபவர்கள் யார்?

மேற்படி தாக்குதலால் சில உள்நாட்டு அரசியல் வாதிகள், ஆயுத உற்பத்தியாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஆயுத கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள், ஸியோனிஸ வாதிகள், ஏனைய இஸ்ரேல் ஏஜன்ட்டுகள், புவிக் கோளத்தில் இடம்பிடிக்க போட்டி போடும் ஏகாதிபத்திய வாதிகள் போன்றோர் நன்மையடைவார்கள்.

தாக்குதலின் பின்விளைவுகள் என்ன?

இத்தாக்குதல் முஸ்லிம் சமூகத்தை பல கோணங்களில் நேரடியாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. (உதாரணமாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கலாசார வெளிப்பாடுகளுடன் பகிரங்கமாக செயற்படல்) என்றாலும் இத்தாக்குதல் மூலம் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்தும் மனோ நிலைக்குத் தள்ளும் திட்டமிடல்கள் இருப்பின் அதுவே அனைத்தையும் விட மிக மோசமான பின்விளைவாக இருக்கும்.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் காரணமாக வைத்து ஏனைய தீவிர வாதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டக் கூடும். அப்போது முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதம் தூக்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரவலாக நியாயப்படுத்தப்படலாம். ஆனால் அது எவ்வகையிலும் நியாயமான ஒரு கருத்தல்ல. இவ்வாறான ஒன்றை உருவாக்க வேண்டும் என்றுதான் அந்த சூத்திர தாரிகளின் சூழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய சூழ்ச்சியில் இருந்து அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவானாக.

முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களைக் கடைபிடிக்க வேண்டும். மக்காவில் இஸ்லாத்தை ஏற்றதற்காக சித்திரவதை செய்யப்பட்ட ஒரு நபித்தோழர் ஜிஹாத் செய்ய அனுமதிகேட்டபோது, 

இறைவேதத்தை ஏற்றதற்காக எமக்கு முன்சென்ற மக்களும் கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நீங்களும் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக ஒரு காலம் வரும். அப்போது ஒரு பெண்கூட ஸன்ஆவில் இருந்து ஹழரமௌத் வரையான நீண்ட தூரத்தை தன்னந்தனியாக கடந்து செல்வாள். ஆவவே அவசரப்பட வேண்டாம். சகோதரரேஎன நபியவர்கள் ஆருதல் கூறினார்கள்.

உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதே இஸ்லாத்தின் இலட்சியம் என்பதை இந்த வழிகாட்டல் தெளிவுபடுத்துகிறதல்லவா?

இந்த நாட்டில் முஸ்லிம்களது இரத்தம் ஓட்டப்பட்டு சொத்துக்கள் சூரையாடப்பட்டாலும் அரச அனுமதியில்லாமல் ஆயுதம் ஏந்துவது தவிர்க்கப்பட வேண்டும். உலக வாழ்க்கை சோதனைக்களம். இதில் எமது இலட்சியம் உயிரைப் பாதுகாப்பதோ, பொருளைத் தேடுவதோ அல்ல. இஸ்லாத்தின் சமாதானத் தூதை முடிந்த அளவு தூரம் எத்தி வைப்பதாகும். இதை முஸ்லிமான ஆண்கள் – பெண்கள், சிறியோர் – பெரியோர் என அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

மேலும் இத்தாக்குதலைக் காரணமாக வைத்து, ஸியோனிஸ வாதிகளின் வழிகாட்டலில் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்களை தீவிரவாத அமைப்புக்கள் என முத்திரை குத்தி அவற்றை தடை செய்து பின் தீவிரவாத அமைப்புக்கள் தோன்றுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்படலாம்.

இப்படி நிகழ்ந்தால் முஸ்லிம்களே முஸ்லிம்களை அழித்துக் கொள்வார்கள். சூழ்ச்சியாளர்களின் திட்டம் அதுதான். இவ்வாறுதான் ISIS உருவாக்கப்பட்டது. இவ்வாறுதான் முஸ்லிம் நாடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இது நிகழுமாயின் இந்த நாட்டில் இஸ்லாமிய வெறுப்புணர்வு வளரும். தேசிய மட்டத்திலோ சர்வதேச மட்டத்திலோ முஸ்லிம்களால் எந்த ஒரு பங்களிப்பும் செய்ய முடியாத ஒரு நிலை தோன்றும்.

முஸ்லிம்கள் கவனிக்க வேண்டியது

இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அனைவரும் அதனடிப்படையிலான சீர்திருத்தத்திற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் உழைக்கின்றார்கள். பெரும்பாலும் இம்முயற்சி இயக்கங்கள் வழியாகவே நடைபெறுகிறது. துரதிஷ்டவசமாக பலபோது இயக்க வெறிகாரணமாக ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலைகளை நாம் சந்தித்தோம்.

இவ்வழிமுறை மிகவும் பிழையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கமோ வேறுயாருமோ இயக்கங்களைத் தடை செய்யு முன் நாமே அதைத் தவிர்ந்து கொள்ளுதல் மேலானது. அத்துடன் சமூக மாற்றத்திற்கான மாற்று வழிகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பொறுப்பானவர்கள் இதுபற்றி கலந்தாலோசிக்க வேண்டும்.

கிறிஸ்த்தவ சகோதரர்களே,

ஈஸா நபியின் (இயேசு நாதரின்) மறைவு குறித்து நீங்கள் சாட்சி கூறுகையில் அவர் கொள்ளப்பட்டு உயிர்தெழுந்தார் என்கிறீர்கள். நாம் அவர் கொள்ளப்பட வில்லை. உயிருடன் உயர்த்தப்பட்டார் என்கிறோம். அவரது மீள் வருகை குறித்து நீங்கள் சாட்சி கூறுகையில் அவர் உலகிற்கு வந்து சமாதானத்தை நிலை நாட்டுவார் என்கின்றீர்கள். நாமும் அதைத்தான் நம்புகின்றோம். அவரது வருகையினையே எதிர்பார்த்து நிற்கிறோம்.

எனவே ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் (இயேசுவின்) வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நீங்களும் நாங்களும் உலக சமாதானத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டும்.. கலந்துரையாடவேண்டும்.

எமக்கு மத்தியில் விரோதத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்த முயலும் தீய சக்திகளை இனங்கண்டு அவற்றை  ஒரே கொடியின் கீழ் நின்று முறியடிக்க வேண்டும். எங்களைப் போலவே நீங்களும் ஒரு சர்வதேச சமூகம். எமக்கு எதிரான அனைத்து சர்வதேச சூழ்ச்சிகளும் உங்களுக்கும் எதிரானவைகளே.

எங்கள் சமூகத்தைச் சார்ந்த சிலரைக் கொண்டு உங்கள் மீது நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதலால் வேதனைப்படும் உங்களுடன் சேர்ந்து நாங்களும் வேதனைப் படுகின்றோம் கதறி அழுகின்றோம்.

துன்பங்கள் தொடர்ந்தாலும் உண்மை வெளிப்படும் நாள் தூரத்தில் இல்லை. அதுவே உண்மையாளர்களுக்கு இன்பமான நாள். ஆமீன்

Asheik M.M.Fazlurrahman Naleemi, B.A. Dip. in Education, SLTS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>