ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் நாட்டு முஸ்லிம்களிடம் அவசர வேண்டுகோள்!


Muslim council

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக  பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும்   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளிடமும், ஊர்ப் பிரமுகர்களிடமும் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் காணப்படுவதாக கூறப்படும் பயங்கரவாத அடிப்படைவாத குழுக்களுக்கும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெளிவானது.

இருப்பினும், கடந்த 21 ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்கிகளினால், நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தினரால் வித்தியாசமான கண்கொண்டு பார்க்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்த பயங்கரவாதிகள் இந்நாட்டின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும், அவர்களைப் பிடித்து பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைப்பது இந்நாட்டு முஸ்லிம்களின் கடமையும், பொறுப்புமாகும். சந்தேகத்துக்கிடமான நபர்கள், இடங்கள் இருந்தால், அது குறித்து ஊர்களிலுள்ள பொறுப்பாளர்களினூடாக அருகிலுள்ள பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க தாமதிக்கக் கூடாது.

இந்த வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பள்ளிவாயல்கள், பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்று கூடி பிரமுகர்கள் கொண்ட ஊருக்கான பாதுகாப்புச் சபையை உருவாக்கி செயற்படுவது காலத்தின் அவசர தேவையாக மாறியுள்ளது.

இந்த சபை உடனடியாக ஊர்களிலுள்ள ஒவ்வொரு வீடுகளையும் சோதனையிட்டு, அறிமுகமில்லாத, புதியவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் இருப்பதைக் கண்டால், உடன் அருகிலுள்ள பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பயங்கரவாதத்தையும், நாட்டில் ஏற்பட்டுள்ள பீதியான நிலைமையையும் போக்க சமூகமாக நின்று ஒத்துழைப்பு வழங்குவதுடன், நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் எமது சமூகத்தின் மீதுள்ள தப்பான கருத்தை  முடிந்தளவு இல்லாமல் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதுதான் இக்கால கட்டத்தில் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கருதுகின்றது.

இவ்வாறு பாதுகாப்புப் படையினருக்கு உதவிகளை வழங்கி நாட்டில் ஏற்பட இருக்கும் ஆபத்துக்களிலிருந்து நாட்டையும் இலங்கை சமூகத்தையும் பாதுகாப்பதில் அமைதியை விரும்பும் முஸ்லிம்களாக நாம் பங்கெடுப்போம்.

இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக சபை முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் விடுத்துள்ள  விடயங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு, நாளை அரச நிறுவனங்களின் பணிகள் வழமை போன்று ஆரம்பிக்கவுள்ளன. இவற்றில் கடமையாற்றும் முஸ்லிம்கள் மற்ற மத சகோதரர்களின், மனங்களை கவரும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் எனவும், சிலருடைய ஆத்திரமூட்டும் பேச்சுக்களுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக செயற்படுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் என்பவற்றின் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   (மு)

 

 

2 comments

  1. நல்லதுதான் இதனால ஒட்டு மொத்த இலங்கை மக்களும் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் ஆனால் இனி மேல் தப்பிக்கவே முடியாது எண்டு ஆன பிறகு முடிவு எடுத்தின்களா இப்படியும் சந்தேகம் வருது அப்படி இருக்காது இருந்தும் மக்களோட மனநில மாற 6மாததிர்க்கு மேல எண்டாலும் ஆகும் குரான்சது

  2. இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள் முஸ்லிம் கவுன்சில் அவர்களே…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>