முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்தல் – ஓர் ஆய்வுப் பார்வை


nikab

4/21 தாக்குதல் காரணமாக இலங்கை மக்களிடையே இஸ்லாம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட்டன. முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரமும் அதில் முக்கியமான ஒன்று. குறித்த பயங்கரவாதத் தாக்குதலுடன் இதை தொடர்பு படுத்த முயன்றமை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்ற ஒன்றாக இருப்பினும் பெண்களின் ஆடைச் சுதந்திரத்தில் அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியமை யாவரும் அறிந்ததே.

புர்கா, நிகாப், அபாயா அணியும் பெண்கள் இதன் மூலம் எதிர்நோக்கிய சவால்கள் ஏராளம். அதனால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆராமல் இருக்கின்றன. நிகாப் அணியும் பெண்களுள் அதிகமானோர் பல்வேறுவகையான சிரமங்களை அனுபவிக்கின்றனர். சிலர் தமது தேவைகளுக்காகவேனும் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் அடங்கியுள்ளனர். இவர்களது ஈமான் தான் இந்த சிரமத்திற்குக் காரணம் எனின் நிச்சயமாக அதற்குரிய வெகுமதியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். ஈமானுக்காகப்படுகின்ற துன்பமும் ஒரு முஃமினுக்கு இன்பமாகவே தோன்றும்.

பெண்கள் தமது முகங்களை மறைத்தல் அவர்களின் இறையச்சத்திற்கான அடையாளம் என்றே எடுத்துக் கொள்வோம். என்றாலும்; முகத்தை மறைத்தல் இஸ்லாம் கடமையாக்கிய ஒன்றல்ல எனின் முகம் மறைக்காத பெண்களை இறையச்சம் குறைந்தவர்களாகப் பார்ப்பது தவறாகும். இவ்வகையில் பெண்களது ஆடை ஒழுங்கில் ‘முகம் மறைத்தல்’ நீண்டகால விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றது. இது விடயத்தில் எவ்வாறு கருத்து வேறுபாடுகள் தோன்றின என்பதை விளக்கி மக்கள் நடுநிலையான ஒரு கருத்திற்கு வர உதவுவதே எனது ஆய்வின் நோக்கமாகும்.

பெண்களின் ஆடை தொடர்பில் ஆய்வு செய்கின்ற போது ஆடை தொடர்பில் அருளப்பட்ட மூன்று அல்குர்ஆன் வசனங்கள் முக்கியம் பெருகின்றன. அவற்றை நாம் அவை அருளப்பட்ட ஒழுங்கில் பார்க்கின்ற போது உண்மைக்கு மிகவும் கிட்டிய முடிவைப் பெற முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்

முதல் வசனம்

ஆதமுடைய மக்களே நாம் உங்கள் மீது உங்களது மான உருப்புக்களை மறைக்கும் ஆடையினையும் அலங்காரத்தையும் (ரீஷ்) அருளியிருக்கின்றோம். மேலும் இறை அச்சம் எனும் ஆடைதான் மிக்க மேலானது’ (அஃராப்:26)

இதனை ஆடை தொடர்பில் அருளப்பட்ட முதல் வசனமாகக் கொள்ளலாம். முஷ்ரிக்குகளில் ஒரு கூட்டத்தார் கஃபாவை நிர்வாணமாக வலம் வருவோராய் இருந்தனர். இவர்கள் விடயத்திலேயே மேற்படி வசனம் மக்காவில் அருளப்பட்டது.

இந்த அல்குர்ஆன் வசனம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. இது ஆடை அருளப்பட்டதன் நோக்கம் மானத்தை மறைத்தலும், அலங்காரமும் எனக் கூறிவிட்டு ஆடைகளில் சிறந்தது தக்வா என்ற ஆடை எனக் குறிப்பிடுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் மறைந்துள்ளன. அவற்றுள் சில வருமாறு,

தக்வா என்பது உள்ளத்திற்குரியது. இவ்வகையில் உடலுக்குரிய ஆடையை விட உள்ளத்துக்குரிய ஆடை முக்கியமானது.

உடலுக்குரிய ஆடை மானத்தை மறைப்பதோடு வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாக்கிறது. ஆனால், உள்ளத்திற்குரிய தக்வா என்ற ஆடை விகார உணர்வுகளைக் குணப்படுத்தி ஷைத்தானில் இருந்து பாதுகாக்கிறது.

இறையச்சத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆடையே உடலை மறைப்பதற்கு மிகவும் சிறந்தது.

உள்ளத்தை தக்வாவினால் அலங்கரிக்காமல் உடலை மாத்திரம் ஆடையால் அலங்கரிப்பதன் மூலம் ஆடை அணிவதன் பிரதான நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.

புறத் தோற்றத்தை விட அகத்தோற்றத்திற்கே அல்குர்ஆன் முக்கியத்துவம் கொடுக்கிறது.
தக்வா என்ற ஆடை உடலில் மட்டுமல்ல பார்வை, கேள்வி போன்ற புலன்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

தக்வா என்ற ஆடையை அணிந்த ஓர் ஆண் ஆபாசமாக ஆடை அணிந்து செல்லும் ஒரு பெண்ணிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான். அவ்வாறுதான் தக்வா என்ற ஆடை அணிந்த பெண் ஆபாசமாக ஆடை அணிந்து செல்லும் ஆணில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாள்.

ஓர் ஆண் வழிகெடுவதற்கு பெண்ணின் ஆடைதான் காரணம் என்பதை விட குறித்த ஆண் தக்வா என்ற மிகச் சிறந்த ஆடையை அணியவில்லை என்பதே மிகப் பொருத்தமான காரணமாகும்.

இரண்டாம் வசனம்:

‘நபியே நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும் உங்களுடைய பெண் மக்களுக்கும் நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுக்கு மோலால் ஜில்பாப்களை இறக்கிக் கொள்ளும்படி கூறுங்கள். அதனால் அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு எவருடைய துன்பத்திற்கும் உள்ளாகாதரிருப்பதற்கு இது குறைந்த பட்ச வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். (அஹ்ஸாப்:59)

மேற்படி வசனம் ‘ஆயதுல் ஹிஜாப்’ என அழைக்கப்படுகிறது. இது ஹிஜ்ரி ஐந்தில் அருளப்பட்டது. இவ்வசனம் அருளப்பட்டதற்கான காரணம், ஆரம்பத்தில் மதீனாவில் இருந்த அடிமைப் பெண்களும், பெரும்பாலான சுதந்திரமான பெண்களும் ஒரே விதமாகவே ஆடை அணிந்தனர். அவர்கள் வீதியில் செல்லும் போது காடையர்களால் பகிடி செய்யப்பட்டனர். இவர்கள் அடிமைப் பெண்களை இலக்கு வைத்தே அவ்வாறு நடந்து கொண்டனர். என்றாலும் அவர்களைப் போன்று ஆடையணிந்திருந்த சுதந்திரமான முஸ்லிம் பெண்களும் காடையர்களின் பகிடிக்குப் பலியாகினர். இந்நிலையில் சுதந்திரமான பெண்களை வேறுபடுத்திக் காட்டவே அல்லாஹ் மேற்படி வசனத்தை அருளினான்.

இவ்வசனத்தில் சுதந்திரமான பெண்களுக்கு அடையாளமாக மேலதிகமான ஓர் ஆடை அறிமுகம் செய்யப்படுகின்றது. அந்த ஆடைதான் ‘ஜில்பாப்‘ என அழைக்கப்படுகின்றது. இதன் வடிவம் தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. என்றாலும் அவ்சனத்தின் வாக்கியப் பிரயோகம் ஜில்பாப் என்பது தலையால் அணியும் ஓர் ஆடை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அப்போதும் கருத்து முரண்பாடுகள் தோன்றுகின்றன. அது தலைமேல் போட்டால் முழு உடலையும் மறைக்கும் ஆடை என்று ஒருசாரார் விளக்குகின்றனர். இவர்களே பெண்கள் கட்டாயம் முகம் மறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இன்னொரு சாரார் ஜில்பாப் என்பது கழுத்திடைவெளியினூடாக தலையால் போடும் ஆடை என விளக்குகின்றனர். இவர்களது விளக்கத்தின் படி ஜில்பாப் மூலம் முகம் மறைக்கப்படுவதில்லை.
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனத்தின் மூலம் இன்னும் சில விடயங்களையும் தெளிவு பெற முடியுமாக உள்ளது.

அடிமைப் பெண்ணில் இருந்து சுதந்திரப் பெண் இனம்காட்டப் படுவதற்காக மாத்திரமே ஜில்பாப் அணியுமாறு ஏவப்பட்டது.

சுதந்திரமான முஸ்லிம் பெண்களை காடையர்களின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பதே அதன் நோக்கமாக இருந்தது. (குறிப்பு – 1ஐப் பார்க்கவும்)

சிலர் நினைப்பது போல் பெண்கள் ஜில்பாப் அணிவது ஆண்களின் கற்பைப் பாதுகாப்பதற்காக எனின் ஜில்பாப் அணியுமாறு அல்குர்ஆன் அடிமைப் பெண்களுக்கும் ஏவியிருக்க வேண்டும்.

மூன்றாவது வசனம் 

‘………நபியே நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையை தாழ்த்தியே வைத்துத் கொள்ளட்டும். தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளட்டும். தானாக வெளித்தெரிபவை தவிர்ந்த தமது ஏனைய அலங்காரத்தை வெளிக்காட்டாதிருக்கட்டும். தம் ‘ஹிமார்’களால் ‘ஜுயூப்’களை மறைத்துக் கொள்ளட்டும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள் மற்றும் ……. அல்லாத வேறு எவருக்கும் தங்களது அலங்காரத்தைக் காண்பிக்காதிருக்கட்டும். இன்னும் மறைந்திருக்கும் அவர்களுடைய அலங்காரத்தை வெளித்தெரிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை பூமியில் தட்டாதிருக்கட்டும்’ (நூர்:31)

ஸுரா அந்நூரில் இடம்பெற்றுள்ள இவ்வசனம் ஆயதுல் ஹிமார் என அழைக்கப்படுகின்றது. இது பனூ முஸ்தலிக் யுத்தத்தின் பின் ஹிஜ்ரி 6 ல் அருளப்பட்டது. அவ்வாறாயின் அது ஆயதுல் ஹிஜாபிற்குப் பின்னர் அருளப்பட்டதாகும். இவ்வகையில் இது ஆயதுல் ஹிஜாபை முழுமைப்படுத்தும் ஒரு வசனமாகக் காணப்படுகின்றது. முதலில் இவ்வசனம் தரும் வழிகாட்டல் எவை என்பதை நோக்குவோம்.

பார்வையைத் தாழ்த்துதல் மூலம் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இரு பாலாரையும் வலியுறுத்துகிறது.

இயல்பாக வெளித் தெரிபவை தவிர வேறு எந்த அலங்காரத்தையும் பெண்கள் வெளிக் காண்பிக்கக் கூடாது. (அலங்காரம் எனப்படுவது பெண்கள் அணியும் ஆபரணங்களா அல்லது அவளது தேகப் பகுதிகளா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன)

ஹிமார்களின் மூலம் ஜுயூப்களை மறைத்துக் கொள்ள வேண்டும். ஜுயூப் என்பது ஜில்பாபில் உள்ள கழுத்திடைவெளியைக் குறிக்கிறது. இவ்வசனம் அருளப்படும் காலத்தில் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக தமது மார்பு வரை இவ்விடைவெளியை பெருப்பித்திருக்கலாம். ஹிமார் என்பது தலையை மறைப்பதற்காக அணியும் ஆடை. அது முந்தானியாக இருக்கலாம். பர்தாவாக இருக்கலாம். இந்த ஹிமாரின் மூலம் தலை மற்றும் ஜுயூபினூடாக வெளித் தெரியும் கழுத்து உட்பட அனைத்துப் பகுதியையும் மறைக்குமாறு ஏவப்பட்டுள்ளது.

அலங்காரத்தைக் காண்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மஹ்ரமான ஆண்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

மறைத்துள்ள அலங்காரத்தைக் காண்பிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது

இவ்வசனத்திலும் முகத்தை மறைப்பதற்கான வெளிப்படையான அல்லது மறைமுகமான அறிவுருத்தல் எதுவும் காணப்படவில்லை. என்றாலும் இயல்பாக வெளித் தெரியும் அலங்காரம் என்பதற்கு கண்களுக்குப் பூசும் சுறுமா என்றும் விரல்களுக்கு அணியும் மோதிரம் என்றும் விளக்கம் கொடுப்போர் கண்ணையும் கைகளையும் தவிர்ந்த அனைத்துப் பகுதிகளும் மறைக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

எனினும், இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு உமர்(ரழி), அனஸ்(ரழி) ஆகியோர் இயல்பாக வெளித் தெரியும் அலங்காரம் என்பதற்கு முகமும் கையும் என விளக்குகின்றனர். இவ்வகையில் முகமும் கையும் மறைக்கப்பட வேண்டியவை அல்ல எனத் தெளிவாகிறது.

ஆயதுல் ஹிஜாபையும் ஆயதுல் ஹிமாரையும் ஒப்பு நோக்கும் போது, பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன.

ஆயதுல் ஹிஜாப் சுதந்திரமான பெண்ணை அடையாளப்படுத்திக் காட்டும் ஜில்பாபை அறிமுகம் செய்ய ஆயதுல் ஹிமார் ஜில்பாபில் உள்ள குறைபாட்டை மறைக்கும் ஹிமாரை அறிமுகம் செய்கிறது.

இவ்வகையில்; முந்திய வசனத்தை பிந்திய வசனம் பூர்த்தி செய்கிறது.

இரு வசனங்களினாலும் பெண்கள் அணிய வேண்டிய மூன்று ஆடைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஒன்று, ஆரம்பத்தில் அடிமைப் பெண்களும் சுதந்திரப் பெண்களும் அணிந்த பொதுவான ஆடை.

இரண்டு, அதற்கு மேலால் சுதந்திரப் பெண்கள் அணிந்த ஜில்பாப், மூன்றாவது, ஜில்பாபில் உள்ள ஜுயூப் (கழுத்திடைவெளி) வழியே வெளித் தெரியும் தேகப் பகுதியையும் தலையையும் மறைக்கும் ஹிமார் ஆகியனவே அவையாகும்.

ஆயதுல் ஹிஜாபில் கற்பைப் பேணல் என்ற விடயம் போதிக்கப்பட வில்லை. ஆனால் ஆயதுல் ஹிமாரில் அது போதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறந்த வழி பார்வையைத் தாழ்த்தல் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகவே கூறப்பட்டுள்ளது.

பெண்களது ஆடைதொடர்பில் ஆயதுல் ஹிஜாப் பூரணப்படுத்தப்படாத தற்காலிக வழிகாட்டல் என்பதனாலேயே அல்லாஹ் அதற்கடுத்த வருடத்தில் பூரண வழிகாட்டலை உள்ளடக்கிய ஆயதுல் ஹிமாரை அருளினான். எனவே ஆயதுல் ஹிமார் தான் நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானது.

இதுவரை பார்த்ததில் இருந்து ஆடை தொடர்பில் அருளப்பட்டுள்ள எந்த ஓர் அல் குர்ஆன் வசனத்திலும் பெண்கள் முகம் மறைக்க வேண்டும் என்றோ அல்லது அவ்வாறு மறைப்பது சிறந்தது என்றோ கூறும் வழிகாட்டலை அவதானிக்க முடியவில்லை. அல்குர்ஆனில் இருந்து நாம் பெற்ற முடிவை நபியவர்களது ஹதீஸ் மேலும் வலியுறுத்துகிறது.

ஆய்ஷா நாயகி அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழி) அவர்கள் உடலை வெளிக் காட்டும் மெல்லிய ஆடையுடன் நபியவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் அஸ்மா (ரழி) யை விட்டும் எதிர்ப்புரம் திரும்பியவாறு ‘அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் அவளது உடலில் முகத்தையும் மணிக்கட்டையும் தவிர ஏனைய பகுதிகள் வெளித் தெரியக் கூடாது’ என்றார்கள்.

மேற்படி ஹதீஸ் ஸஹீஹானது என்று இமாம் அல்பானி உறுதிப்படுத்துகின்றார். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது கருத்தும் பெண்களது முகமும் மணிக்கட்டும் (கை) அவ்ரத் அல்ல என்பதுதான். நபியவர்களது காலத்தில் ஸஹாபிய்யாத் பெண்கள் பொதுவாக முகம் மறைக்கும் மரபுடையவர்களாக இருக்கவில்லை என்றே வரலாறு கூறுகிறது.

மேற்கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது பெண்கள் முகம் மறைக்க வேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் முகத்தை மறைப்பதுதான் தக்வாவின் அடையாளம் எனக் கொள்ளல் பிழையானது என்பதுடன் இஸ்லாம் கடமையாக்காத ஒன்றை இஸ்லாத்தின் அடையாளமாகக் கருதி அதற்காகப் போராடுவது மடமையின் அடையாளம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படியும் ஒரு வினா எழலாம்

பெண் விரும்பினால் முகத்தை மறைக்கும் உரிமை அவளுக்குக் கிடையாதா?

தாராளமாக உரிமை இருக்கிறது. முகத்தை மறை என்று கட்டாயப்படுத்துவது எப்படி ஷரீஅத்திற்கு விரோதமானதோ அவ்வாறே முகத்தை மறைக்காதே என்று கட்டாயப்படுத்துவது மனித உரிமைக்கு விரோதமானதாகும். ஆயினும் தனிமனித உரிமை பொது நலனுக்கு பாதிப்பையோ அசௌகரியத்தையோ ஏற்படுத்துமாயின் பொதுநலனை முற்படுத்துவதே சிறந்ததாகும்.

இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்குதல், முஸ்லிம் பெண்களின் கல்வி முன்னேற்றம், அவர்களது சமூகப் பங்களிப்புக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கள் போன்றன பொதுநலன் சார்ந்தவைகளாகும். இந்நிலையில் தனது மனைவி, பெண்பிள்ளைகள் முகம் மறைக்க வேண்டும் என்ற ஓர் ஆணின் சுயவிருப்போ, நான் முகம் மறைப்பேன் என்ற ஒரு பெண்ணின் உரிமைக் குரலோ பொது நலனுடன் ஒப்பிடுகையில் வலிமை குறைந்த தனிநபர் உரிமைகளாகும்.

பெண்கள் முகம் திறந்த நிலையில் இருப்பது தமக்குப் பாதிப்பு என ஆண்கள் நினைப்பது அவர்களது ஈமானில் உள்ள பலவீனமாகும். அவ்வாறே, பெண்கள் அண்ணிய ஆண்களுக்கு தமது அலங்காரங்கத்தைக் காட்ட நினைப்பது அவர்களது ஈமானில் உள்ள பலவீனமாகும். ஈமானின் பலவீனத்தைப் போக்க ஒரே வழி தக்வா என்ற ஆடையை பூரணமாக அணிவதே ஆகும்.
————————————————————————————————
குறிப்பு – 1: சிலர் இதனை அடிமைப் பெண்ணுக்கு எதிரான பாரபட்டசம் எனக் கருதலாம். ஆனால் அவ்வாறல்ல, ஏனெனில் சுய தெரிவின் அடிப்படையிலேயே ஆடை அணிய வேண்டும். அதை நிர்ப்பந்திக்க முடியாது. ஈமான் கொண்ட சுதந்திரமான பெண்களால் மாத்திரமே இஸ்லாம் கூறும் ஆடையைத் தெரிவு செய்ய முடியும். ஈமான் கொள்ளாத சுதந்திரமான பெண் தான் நினைத்ததை அணிவாள். அடிமைப் பெண் எஜமானன் விரும்பும் ஆடையை அணிவாள். எஜமானன் முஃமினாக இல்லாத பட்டசத்தில் இஸ்லாம் அடிமைப் பெண்ணுக்கு ஆடை ஒழுங்கு பற்றிக் கூறுவதில் எப்பயனும் கிடையாது.

அடிமைகள் மீதான அத்துமீறல்கள் அக்காலத்தில் புரையோடிப் போன ஒரு சமூக சீர்கேடு. அதை உடினடியாக சீர்திருத்த முடியாமல் இருந்தது. ஆனால் இஸ்லாம் மனித உள்ளங்களை ஆட்கொண்ட போது அச்சீர்கேடு படிப்படியாக இல்லாதொழிந்தது. (மு)

Asheik M.M.Fazlurrahman Naleemi, B.A. Dip. in Education, SLTS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>