அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி நீடிப்பு


IMG_8379

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக தம்பிலுவில், திருக்கோவில், மகாஓயா, பொத்துவில், பதியத்தலாவ, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாரியளவில் நிலவுகின்றது. இங்கு 22 பவுசர்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

பிரதான குளங்கள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் துரிதமாக வற்றி வருகின்றன.மாவட்டத்திற்கு விவசாய நீர்ப்பாசனம் தொடக்கம் குடிநீர் வரை வழங்கி வருகின்ற அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டமும் வரலாற்றில் முதல் தடவையாக வெகுவாகக் குறைந்துள்ளது. 07இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி நீரைக்கொள்ளும் இச்சமுத்திரம், தற்போது 36 ஆயிரம் ஏக்கர் அடி நீரை மாத்திரமே கொண்டுள்ளதாக நீர்ப்பானசத் திணைக்களம் தெரிவித்தது.

மேலும், வரட்சியால் விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்முறை வேளாண்மை செய்கை பண்ணப்பட்ட 47,300 ஹெக்டேயரில் 1,661 ஹெக்டேயர் நீரின்றி கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எவ்.எ.சமீர் தெரிவித்தார்.இதேவேளை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு கமநல சேவை நிலையத்திற்;குட்பட்ட சேனக்காடு, மொட்டயான்வெளி ஆகிய வயற்காணிகளின் 3,000 ஏக்கர் காணியில் பயிர்; செய்து யானைகளை விரட்டிக் காவல் இருந்த விவசாயிகளின் நிலை இறுதித் தறுவாயில் கவலைக்கிடமாக மாறியுள்ளது. வெறும் 500 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மீதி ஊரக்கை, மொட்டையகல, பட்டிமேடு நீத்தையாறு வடகண்டம் ஆகிய பிரிவுகளிலுள்ள சுமார் 2,500 ஏக்கர் நிலம் வரட்சியால் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.அங்குள்ள பிரதான சாகாமக்குளம் வரண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயத்தை கைவிடவேண்ய துர்ப்பாக்கிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

வரட்சியால் வடக்கு,கிழக்கு மாகாணங்களே அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21,094 குடும்பங்களை சேர்ந்த 70,636 பேர் வரட்சிக்கு முகங்கொடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த் 63,115 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5,516 குடும்பங்களைச் சேர்ந்த 19,262 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,767 குடும்பங்களைச் சேர்ந்த 40,095 பேரும், வவுனியா மாவட்டத்தில் 138 குடும்பங்களைச் சேர்ந்த 465 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வடமாகாணத்தில் மொத்தமாக 57,589 குடும்பங்களைச் சேர்ந்த 1,93,578 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாணமே வரட்சியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இங்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் வரண்டுபோயுள்ளன.வரட்சியால் அம்பாறை மாவட்டத்தில் 11,536 குடும்பங்களைச் சேர்ந்த 69,957 பேரும், திருக்கோணமலை மாவட்டத்தில் 2,877 குடும்பங்களைச் சேர்ந்த 9,380 பேரும் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிழக்கில் மொத்தமாக 37,931 குடும்பங்களைச் சேர்ந்த 1,56, 990 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.(அ)

-பாறுக் ஷிஹான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>