70 சதவீதமான பெண்கள் வலைப்பின்னல் ஊடாக ஊடகப் பங்களிப்பு செய்கின்றனர்


IMG_20190911_181439

மக்களை நன்மையின் பால் அழைக்கக் கூடியதாகவும் தீமையிலிருந்து தடுக்கக் கூடியதாகவும் ஊடகவியலாளர்களின் பணி அமைய வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினருமான பாத்திமா முஸஃப்பர் தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் பெண்கள் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி புர்கா பீ இப்திகார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து பேசிய பாத்திமா முஸஃப்பர் கூறியதாவது,

சர்வதேச ரீதியில் ஊடகத்துறையில் பெண்கள் எப்படி தங்களது பங்களிப்பைச் செய்கின்றார்கள் என்று பார்க்கும் போது, 2014இல் சர்வதேச பெண்கள் ஊடக அமைப்பு (IWMF), ஊடகத்தில் பணிபுரியும் 1000 பெண்களிடம் கருத்து கேட்ட போது, அதில் 350க்கு மேற்பட்ட ஊடகப் பெண்கள், “நாங்கள் எமது ஊடகப் பயணத்தில் நிறைய சாவல்களைச் சந்தித்திருக்கிறோம்” என்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

2012 – 2016 இல் 7 சதவீதம் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 2016ற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டுள் சமூக வலைத்தளம் மூலமாக பெண்கள் 73 சதவீதம் பங்களிப்புச் செய்கிறார்கள்.

ஒரு டாக்டராக, பொறியியலாளராக உள்ளவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ஊடகத்தில் பணிபுரிவோரைப் பற்றி இந்த உலகமே பேசுகிறது.

ஊடகத்தில் பெண்கள் இறங்குகிறார்கள் என்றால் நேரடியாக அவர்கள் போர் செய்யத் துவங்குகிறார்கள் என்று அர்த்தம்.

இறைவன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து விட்டு முதலாவது தொடர்பாடல் திறனைத்தான் அவர்களுக்குக் கொடுத்தான். இறைவன் ஆதம் அலை அவர்களுக்கு அறிவைக் கொடுத்துவிட்டு, முதலாவதாக வேலை செய்வதைக் கற்றுக் கொடுக்கவில்லை. சம்பாதிக்க கற்றுக் கொடுக்கவில்லை. முதலாவதாக தொடர்பாடல் திறனைத்தான் கற்றுக் கொடுத்தான். “அங்கு இருக்கக்கூடிய மலக்குமார்களுக்கு ஸலாம் சொல்லுங்கள். அதனை உங்கள் சந்ததியினர் பின் தொடர்வார்கள்.” இது இறைவன் விரும்பி தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கக்கூடிய திறமை. இந்தத் திறமை எல்லோருக்கும் வராது. நீங்கள் எழுதுறீங்களோ, வாசிக்கிறீங்களோ, பேசுறீங்களோ அது இறைவன் கொடுத்திருக்கின்ற ஒரு திறமை. சிறந்ததொரு ஆற்றல்.

மற்றவருக்கு எத்திவைக்கின்ற திறமை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அல்லாஹ் முதல் வஹி இறக்கும் போது, “உங்களுக்கு எழுதுகோலைக் கொண்டு நான் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறுகிறான். எனவே இதை யாரெல்லாம் எடுத்துச் செயற்படுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் முதல் கட்டளையைப் பின்பற்றுபவர்கள்.

இன்று ஊடகம் யாருடைய கைகளிலே இருக்கின்றது என்று பார்த்தால், இஸ்ரேலினுடைய கைகளில்தான் இருக்கின்றது. அவர்கள்தான் இன்று உலகை ஆளுகிறார்கள். ஏன் என்று பார்த்தால் அல்லாஹ் எதைக் கட்டளை ஆக்கினானோ? கடமையாக்கினானோ? அதை முஸ்லிம் செய்வதற்குத் தவறிவிட்டனர். அல்லாஹ்வின் ஏற்பாடு, “நீங்கள் நான் சொன்ன கட்டளையைச் செய்யத் தவறினீர்கள் என்றால், நான் மற்றவர்களிடம் அந்த வேலையை வாங்குவேன்” என்று குறிப்பிடுகிறான்.

யார் ஊடகத்துறையை பயன்படுத்தி, அதனைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றார்களோ அவர்கள்தான் இன்று உலகை ஆளுகிறார்கள்.

இதை எப்படி நாங்கள் எதிர்கொள்வது? அன்று பத்திரிகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடந்த 5 வருடத்துக்குள் ஊடகம் ஒவ்வொருரின் கைகளிலும் இருக்கின்றது. ஒரு பட்டணை அழுத்துவதன் மூலம் எல்லா விடயங்களையும் நொடிப்பொழுதில் அறியக்கூடிய சூழலில் இருக்கின்றோம்.

கைப்பேசியில் ஒரு செய்தி எமக்கு வருகின்றது. அதன் உண்மை நிலை அறியாமல் அதனை அடுத்தவருக்கு அனுப்புகின்றோம். இந்த இடத்தில் இறைவன், “உங்களிடம் ஒரு செய்தி வந்தால் அதனை விசாரித்துவிட்டு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்துவருக்கு எத்திவையுங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். அத்தோடு, அந்த செய்தியை யார் கொண்டு வருகிறார் என்பதை அவதானியுங்கள் என்றும் கூறுகின்றான்.

எனவே ஊடகத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில், “அவர்களுக்கு நான் தெளிவுரையைக் கொடுத்துள்ளேன்” என்று கூறுகிறான். எனவே ஊடகத்திலே உள்ளவர்கள் பயான் செய்கிறார்கள்.

பயான் என்றால் மக்களுக்கு ஒரு விடயத்தைப் பற்றி தெளிவுரை கொடுக்கிறீர்கள். அப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு பொறுப்பாளியாக நீங்கள் இருக்கிறீர்கள். எனவே அந்த ஊடகத்தை எப்படி நாம் கையாள்வது என்று பார்த்தால்,

வரக்கூடிய செய்தியை நாம் சரியா? தவறா? என ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்தச் செய்தி பயனளிக்குமா? அல்லது அழிவை உண்டாக்குமா? இந்த செய்தி சத்தியத்துக்கான செய்தியா? அல்லது அசத்தியத்துக்கான செய்தியா? என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

சில வாய்ப்புகள் உங்களிடமிருந்து நழுவிப் போகலாம். வருமானம் கூட நழுவிப் போகலாம். ஆனால், அதுதான் அல்லாஹ் நமக்கு வைத்திருக்கக் கூடிய சவால். இதனால் இந்த உலகத்தில் மட்டுமல்ல மறுமையிலும் அதற்கு கூலி உண்டு.

செய்தியை மற்றவர்களுக்கு எத்திவைக்கக் கூடிய நிலையில் இருக்கும் நாங்கள், மிக மிக முக்கியமான பொறுப்பில் இருக்கின்றோம். நான் எத்திவைக்கும் செய்தியை உலகம் ஏற்றுக் கொள்ளுமா? இப்போதுள்ள சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? என்பது முக்கியமல்ல. அதனை அல்லாஹ் பொறுந்திக் கொள்வானா? என்பதுதான் எமது சவால்.

மக்களை நன்மையின் பால் அழைக்கக்கூடியதாவும் தீமையிலிருந்து தடுக்கக் கூடியதாவும் எமது ஊடகப் பணி அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில், சாமிலா முஸ்தீன், உட்பட பலரும் உரையாற்றினர். முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், செயலாளர் சாதிக் சிஹான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். (ஸ)

– எம்.எஸ்.எம்.ஸாகிர் –

IMG_20190911_191509 IMG_20190911_181439

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>