பிரதமரின் திடீர் கூட்டம், சஜித் மௌனம், பெரும்பான்மை எதிர்ப்பு !


sri-lanka-president-maithripala-sirisena-with-prime-minister-ranil-wickramasinghe

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவந்த பிரேரணைக்கு அமைச்சர்கள் இருவரின் ஆதரவு மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும், பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

நேற்று (19) மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த அவசர அமைச்சரவைச் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க ஆகியோரே இவ்வாறு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதில் கலந்துகொண்ட, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, ரவுப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், பி. திகாம்பரம், ரஞ்ஜித் மத்தும பண்டார, தலதா அத்துக் கோரல ஆகியோர் பிரதமரின் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்தால், மக்கள் அரசாங்கத்தை தவறாக நினைப்பார்கள். தாம் தேர்தலுக்கு பயப்படுவதாக கூறுவார்கள் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச மௌனம் சாதித்ததாகவும் கூறப்படுகின்றது.

45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டம் தீர்மானங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பொது உடன்பாட்டை ஏற்படுத்தி அதன் பின்னர் தேவைப்படின் அமைச்சரவையைக் கூட்டுமாறு ஜனாதிபதி இதன் போது அறிவித்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

கடந்த ஐந்து வருட கால நிறைவு வரை சாதிக்க முடியாத ஒன்றை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சாதிக்க முனைவது வேடிக்கையானது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேவையான அத்தனை நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த பல வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்கள் எதனையும் நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வருகின்றார் என்ற குற்றச்சாட்டு எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்படுகின்றது.

ஜனநாயகத்தின் அச்சாணியாக காணப்படும் தேர்தலை இழுத்தடித்து விட்டு, நாட்லுள்ள மாகாண சபைகள் ஆளுநரின் அதிகாரத்தில் விடப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகம் பற்றிப் பேசுவதாக இந்த அரசாங்கத்தின் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு, ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட பிரிவில் இரு பெரும் கட்சிகளும் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இந்த உண்மை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் நடாத்தப்பட்ட ஒத்திகையில் தெரியவந்தது. தேர்தலுக்கு இந்த அரசாங்கம் பயம் என்ற கருத்தை எதிர்க் கட்சித் தலைவர் முதன் முதலில் மாகாண சபையின் ஆயுட் காலம் முடிவடைந்த காலத்திலிருந்தே கூறிவருகின்றார்.

இந்தக் கருத்துக்களை நிரூபிக்கும் வகையில் பிரதமரின் நேற்றைய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைந்துள்ளதா? என்ற சந்தேகம் பலருடைய உள்ளத்திலும் எழாமல் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு 19 ஆம் திருத்தச் சட்டம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இந்த விடயமும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான அச்சமாகவே பார்க்கப்பட்டது.

தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் எதிலிருந்தும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. யார் வந்தாலும் வெற்றிபெற்றுக் காட்டுவோம் என்ற சவாலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விடுத்துள்ளது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றது என்பதுவே அரசாங்க ஆதரவாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.  (மு)

– முஹிடீன் இஸ்லாஹி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>