விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு இதுதான் காரணமா?


Ranil-Sagala-Mahinda-Secre-Meeting-E-300x192

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைவர்களுக்கும் ஜனாதிபதி முறைமையை தற்பொழுது நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவை காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதி முறைமையை நீக்கினால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும்,  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்தளையில் நேற்று (21) நடைபெற்ற கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.  இதற்காக முதலில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேண்டும். இதனையடுத்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற வேண்டும். இதற்கு பாராளுமன்றத்திலுள்ள மொத்த உறுப்பினர்களில் 150 இற்கும் மேற்பட்டோர் சார்பாக வாக்களிக்க வேண்டும்.

பின்னர் இது குறித்து மக்கள் வாக்கெடுப்புக்கு (சர்வஜன வாக்கெடுப்பு) விட வேண்டும். இதன் பின்னரும் இதனை மாற்ற முடியுமா என தனக்குத் தெரியாது எனவும் ஜனாதிபதி கட்சி ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார்.

இப்படியான ஒன்றைத் தான் நான்கரை வருடங்கள் கழிந்த நிலையில் அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றப் பார்க்கின்றார்கள் எனவும் ஜனாதிபதி விசனம் தெரிவித்தார்.

நெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள். தெற்காசியாவில் அரசியல் சாணக்கியம் உள்ள ஒருவராக கருதப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார் என்றால் நியாயங்கள் இல்லாமல் இருக்க முடியாது.

அத்துடன், இப்படியான ஒரு பிரேரணை முன்வைக்கப் போகின்றது என்று தெரியாத நிலையிலா ஜனாதிபதி இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்ற கேள்வியும் சாதாரண ஒரு குடிமகனினதும் உள்ளத்தில் எழுவது சாதாரணமானது. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிய கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் சார்பு அமைச்சர்களும் இதனை குழப்பியதனால்தான் இந்த விவகாரம் பிரச்சினையாக மாறியுள்ளது என்ற கருத்து அரசியல் விமர்சகர்களின் உள்ளங்களில் இல்லாமல் போகாது.

தற்பொழுது ஜனாதிபதியும் பிரதமரும் இந்த சேற்றைப் பூசிக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.  இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூட்டியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பஸ்யாலை, கல்எளிய தன்சல்வத்தை டொன் ஸ்டீவன் வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கு நடுகல் இடும் நிகழ்வில் கடந்த 20 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர்  இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுக் கூட்டத்தில் நேற்று (21) உரையாற்றிய ஜனாதிபதி, தான் இக்கூட்டத்தைக் கூட்டவில்லையெனவும், பிரதமரே இக்கூட்டத்துக்குப் பொறுப்பானவர் எனவும் கூறியிருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரின் சந்திப்புக்களின் பின்னர்தான் இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் தீர்மானம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டது எனவும் உத்தியோகப்பற்றற்ற செய்திகள் கூறுகின்றன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அனைவரினதும் உடன்பாடுடனா? என்பதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர் போட்டியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க முடியாமல் தனிமைப்பட்டிருப்பது என்பன இந்த ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணை அமைச்சரவைக்கு வரக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் பொதுவாகவே இல்லாமல் இல்லை.

அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையை எதிர்த்தவர்கள் முன்வைத்த கருத்தும் இந்த உண்மையைக்கு உரம் சேர்ப்பதாக இருக்கின்றது எனச் சுட்டிக்காட்டினால் யாரும் மறுக்கமாட்டார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் எதிராகவா இந்தப் பிரேரணையை கொண்டுவரப் போகின்றீர்கள் என சிறிய பங்காளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

எனவே, எல்லா உள் வீட்டுக்குள்ளும் பிரச்சினைகள் உசுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது என்பது விளக்கம் தேவையில்லாத உண்மையாக உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாறு அமையப் போகின்றது என்ற சந்தேகம், அனைவரையும் அரசியல் அரங்கில் கொண்டுவந்து அமரச் செய்துள்ளது.

உறங்காமல் இனவாதம் பேசிக் கொண்டிருந்த சில ஊடகங்கள் மாத்திரம் அதேபோக்கில் அரசியல்வாதமும் பேசிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத் தேவையில்லாத உண்மையாகும்.   (மு)

– முஹிடீன் எம்.எம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>