“ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகலாம்”


New Picture

நாட்டில் நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்குள்ள பல கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளது. பலர் ஜனாதிபதி வேட்பாளராக வரும் போது ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து பலருக்கும் சட்ட விளக்கம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு டெய்லி சிலோன் வாசகர்களுக்காக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் அவர்களுடன் நடாத்திய  விசேட நேர்காணலை  இங்கே தருகின்றோம்.

கேள்வி :

நாட்டில் காணப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டங்கள் பற்றி ?

பதில் :

இலங்கையில் இரண்டு பிரதானமான சட்ட அடிப்படைகளைக் கொண்டே ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் நோக்கப்படுகின்றன. அதில் பிரதானமானது, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு. இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் பல உறுப்புரைகள் ஜனாதிபதியின் தெரிவு, அவரின் தகைமைகள் என்பன போன்ற பல விடயங்கள் இருக்கின்றன.

அதேபோன்று, தேர்தல் ஒன்று நடாத்தப்படுகின்றபொழுது வேட்பு மனுக் கோரும் அறிவித்தல் வெளியிடப்படுகின்ற  தினத்திலிருந்து, தேர்தலை நடாத்தி, முடிவுகளை வெளியிட்டு, ஜனாதிபதி யார் எனப் பிரகடனப்படுத்தும் வரையிலான அனைத்து செயற்பாடுகளும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி :

இலங்கையிலே ஜனாதிபதியாக எவருக்கும் வரலாமா?

பதில் :

இது நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். முக்கியமாக அரசியலமைப்பின் 91, 92 ஆம் உறுப்புரைகள் இது பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த உறுப்புரைகளிலுள்ள நிபந்தனைகளுக்கு அமையவே ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.

இதன்படி, ஜனாதிபதியாக போட்டியிட விரும்பும் ஒருவர் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்காதவராக இருத்தல் வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக அவர் காணப்பட வேண்டும் என நிபந்தனைகள் உள்ளன.

ஜனாதிபதியாகப் போட்டியிடும் ஒருவர் அரசியல் கட்சியொன்றிலிருந்து போட்டியிடுவதாக இருந்தால், அவர் ஜனாதிபதியாவதற்குரிய தகைமைகள் எனக் கூறப்பட்டுள்ள விடயங்களைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். அரசியல் கட்சியிலிருந்து போட்டியிடும் ஒருவர் வேட்பாளர் கட்டுப்பணமாக 50 ஆயிரம் ரூபாவைச் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர்களுக்கும் போட்டியிட முடியும். இவர் ஏற்கனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராகவோ அல்லது தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவராகவோ இருத்தல் வேண்டும் என்ற விசேட நிபந்தனையுண்டு.

கட்டுப்பணத்திலும் சுயேச்சைப் போட்டியாளர் ஒருவர் அதிகமாகவே செலுத்த வேண்டியுள்ளார். இவர் 75 ஆயிரம் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டுப்பணத்தை செலுத்த வரும் போது சுயேச்சை வேட்பாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமிருந்து ஒரு சான்றிதழையும் எடுத்துவர வேண்டும். அதில், இவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது நிகழ்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவோ இருக்கின்றவர் என்ற விடயம் குறிப்பிடப்பட வேண்டும். இது மிக முக்கியமானது.

மட்டுமல்லாமல், கட்சியின் வேட்பாளரை கட்சியின் செயலாளர்தான் பிரேரிப்பார். அதேபோன்று, சுயேச்சை வேட்பாளரை ஒரு வாக்காளர் பிரேரிக்க முடியும்.

கேள்வி :

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக் கையேற்கும் விதிமுறைகள் எவ்வாறு காணப்படுகின்றன?

பதில் :

ஜனாதிபதித் தேர்தலிலே வேட்புமனுத் தினத்தன்று காலை 9.00 மணியிலிருந்து முற்பகல் 11.00 மணி விரையில் வேட்பு மனுக்கள் கையேற்கப்படும். தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்புமனு கையேற்பதற்கு நியமிக்கப்படும் தினத்தில் இது இடம்பெறும்.

வேட்புமனு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பமாக இன்னும் அரை மணித்தியாலம் அதிகரித்துக் கொடுக்கப்படும். ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்படுமா?அல்லது இல்லையா? என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கும்.

இதன் பின்னரே தேர்தல் வேட்பளார்கள் யார்? அவர்களுக்கென குறித்தொதுக்கப்படும் சின்னங்கள் எவை? அவர்கள் கட்சியிலிருந்து போட்டியிடுகின்றார்களா? அல்லது சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றார்களா?  என்பதை ஆணைக்குழு தீர்மானிக்கும்.

கேள்வி :

பலர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதன் வாக்குச் சீட்டு எப்படியானதாக இருக்கும் என்பதைக் கூற முடியுமா?

பதில் :

வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டால் வாக்குச் சீட்டின் அமைப்பு முக்கியமானது. இதில் காணப்படும் வாக்காளரின் பெயர் சிங்கள அகரவரிசைப்படி அமையப் பெற்றிருக்கும். அதன் பின்னர் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் பெயர் இருக்கும். சுயேச்சை வேற்பாளராக இருந்தால், சுயேச்சை வேற்பாளரைப் பிரேரித்தவரின் பெயர் ஏனைய கட்சியின் பெயர் இருக்கும் இடத்தில் இடப்பட்டிருக்கும். அடுத்து கட்சியின் சின்னம் அமைந்திருக்கும். சின்னத்துக்கு எதிரே ஒரு வெற்றுக் கூடு இருக்கும். இதுவே வாக்குச் சீட்டின் அமைப்பாகும்.

கேள்வி :

வாக்களிக்கும் முறைமை எப்படி காணப்படும் எனத் தெளிவுபடுத்த முடியுமா?

பதில் :

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுபட்டதாக அமையும். இலங்கையில் இருக்கின்ற ஜனாதிபதி முறைமையில், வாக்கையும் அளித்து, விருப்பையும் வழங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் மாத்திரமே இவ்வாறு வாக்கோடு, விருப்பு வாக்கு வழங்க முடியும்.

இலங்கையில் 88 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் மூன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளார்கள். இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டால் மாத்திரமே விருப்பு வாக்கு அளிக்கப்படுவதில்லை.

இதில் யார் கூடுதலாக வாக்குகளைப் பெறுகின்றார்களோ அவர் ஜனாதிபதியாகுவார். ஏனெனில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் அவர் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மூன்று பேர் போட்டியிட்டால், அப்பொழுது, வாக்காளர் ஒருவருக்கு ஒரு வாக்கையும், இரண்டாவது விருப்பொன்றையும் அடையாளம் இட முடியும்.

ஆனால், மூன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், ஒருவருக்கு வாக்கினையும், தான் விரும்பினால் மற்றைய இருவருக்கு இரண்டு விருப்புக்களையும் வழங்க முடியும்.  மற்றைய இரு விருப்புக்களும் இரண்டு, மூன்று என்று அடையாளம் இட வேண்டும். விருப்புக்கள் அடையாளமிடப்படுகின்ற போது, எப்பொழுதும் சாதாரண இலக்கம் எனும் கூறப்படுகின்ற 2, 3 எனக் குறிப்பிட வேண்டும்.

அதேபோன்று, ஒரு வாக்காளர் தனது வாக்கை அளிக்கின்ற போதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்களிக்கும் முறையாக இலக்கத்தைக் குறிப்பிடுவதையே கருதப்படும். குறிப்பிட்ட வெற்றுக் கூட்டில் 1 என இலக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.  இரண்டு பேர் போட்டியிடுகின்ற போதிலும் 1 என்று போடுவதுதான் மிகச் சரியான முறையாகும்.

இருப்பினும், ஒன்றுக்குப் பதிலாக புள்ளடியை இடலாம். ஒருவர் புள்ளடியையும் ஒன்று என்ற இலக்கத்தையும் ஒரே வாக்குச் சீட்டில் குறிப்பிட்டிருந்தால், அது பிரச்சினைக்குரியதாக மாறும். ஏனெனில், இதில் எது வாக்கு, எது விருப்பு என்பது தெரியாமல் போகின்றது.

ஏனைய தேர்தல்களில் புள்ளடி இடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட  முறையாகும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு எண்ணைக் குறிப்பிடுவதே முறையானதாகும். ஒரு வாக்குச் சீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் போடப்பட்டிருந்தால், அது செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.

கேள்வி :

விருப்பு வாக்குகள் ஏன் அளிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

பதில் :

இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு, அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்தையும் ஆகக் குறைந்தது ஒரு வாக்கையும் பெற வேண்டும். இவ்வாறு பெற முடியாத போது வெற்றியைத் தீர்மானிப்பதற்கே இந்த விருப்பு வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி :

விருப்பு வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன என்பதை விளக்கமாக கூறுங்களேன் ?

பதில் :

எவருமே 50 சதவீதத்துக்கு மேல் பெற வில்லையாயின் முதல் கட்ட வாக்கு எண்ணும் பணி இடம்பெறும். இதில், செல்லுபடியான வாக்குச் சீட்டில் உள்ள 1 என்று போடப்பட்டுள்ள இலக்கம், அல்லது புள்ளடி மாத்திரம் எண்ணப்படும்.

உதாரணமாக, 1200 வாக்கு எண்ணும் நிலையங்கள் உள்ளன. இந்த எல்லா நிலையங்களிலும் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதி பெறுபேறுகள் அறிவிக்கப்படும்.

இந்த முடிவுகளின் படி நாட்டில் எவரும் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகள் பெறாத போது, இரண்டாவது கட்ட வாக்கெண்ணும் நடவடிக்கைக்கு செல்ல வேண்டும்.

இதன்போது, வாக்கெண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு வேட்பாளரதும் வாக்குச் சீட்டுக்கள் தனித்தனியாக முத்திரையிட்டு வைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, நான்கு பேர் போட்டியிட்டு, யாருமே 50 சதவீதம் எடுக்க வில்லை. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 100 என வைத்துக் கொள்ளுங்கள். நான்கு பேர் போட்டியிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்.  ஒருவர் 40 சதவீதத்தையும், இன்னுமொருவர் 35 சதவீதத்தையும், இன்னுமொருவர் 15 சதவீதத்தையும், இறுதியானவர் 10 வீதத்தை எடுத்துள்ளனர்.

இதன்போது, இதிலுள்ள முதல் 2 பேரும் தொடர்ந்தும் போட்டியில் இருப்பதாக  தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும். ஏனையோர் நீக்கப்படுவர்.  இதனால், ஏற்கனவே நான்கு முனைப் போட்டியாக காணப்பட்ட நிலை, இரு முனைப் போட்டியாக மாறும். இதில் தெரிவு செய்யப்பட்டவர்களை ‘ஏ‘ எனவும், ‘பீ‘ எனவும் எடுத்துக் கொள்வோம். நீக்கப்பட்டவர்களை ‘சீ‘ எனவும், ‘டீ‘ எனவும் பெயரிட்டுக் கொள்வோம்.

பின்னர், இந்த முதல் இரு நிலையிலுமுள்ள ஏ.பீ. என்பன போட்டியில் இருப்பதாகவும், ஏனையவர்களான சீ.டீ. என்பன போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் எல்லாத் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு கட்டளை பிறப்பிக்கும்.

இதனையடுத்து, போட்டியிலிருந்து நீக்கப்பட்ட சீ. டீ. என்பவற்றின் வாக்குகள் கருத்தில் கொள்ளப்படும். இந்த இருவர்களின் வாக்குச் சீட்டுக்களிலும், ஏ.யிற்கும் பீ. யிற்கும் அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

முதலில் சீ. யின் வாக்குச் சீட்டுக்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதில், ஒரு வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டால், அந்த வாக்குச் சீட்டில் இரண்டும் இல்லை, மூன்றும் இல்லையென்றால் அது அவ்வாறே ஒதுக்கப்படும்.

பின் அதன் இரண்டாவது வாக்குச் சீட்டு எடுக்கப்படும். இதில் இரண்டாவது மூன்றாவது விருப்புவாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கப்படும். இரண்டாவது விருப்பு வாக்கு ‘ஏ‘ யிற்கு அளிக்கப்பட்டிருந்தால், அது ஏ யிற்குரிய ஒரு வாக்காக கருதப்படும்.

மற்றொரு வாக்குச் சீட்டை எடுத்துப் பார்க்கப்படும். அதில், இரண்டாம் இலக்க விருப்பு வாக்கு ‘டீ‘ யிற்கு போடப்பட்டிருக்கும். இந்த வாக்கு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளருக்கு என்பதனால், கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இருப்பினும், அதே வாக்குச் சீட்டில் மூன்றாவது விருப்பு இலக்கம் ‘பீ‘ யிற்கு இடப்பட்டிருக்கும். இப்போது, இது ‘ பீ‘ யிற்குரிய ஒரு வாக்காக சேர்க்கப்படுகின்றது.

இவ்வாறு ‘ சீ‘ யினுடைய வாக்குச் சீட்டுக்கள் சகலதும் எண்ணப்பட்டதன் பின்னர், ‘டீ‘ யினுடைய வாக்குச் சீட்டுக்களும் எண்ணப்பட்டு  ‘ஏ‘. ‘பீ ‘. வாக்காளர்களுக்கான விருப்பு வாக்குகள்  எண்ணப்பட்டு வெற்றி தீர்மானிக்கப்படும். வாக்காளர்கள் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தும் போது மாத்திரமே இந்த நிலையில் வெற்றிகள் தீர்மானிக்கப்பட வாய்ப்புக்கள் உருவாகின்றன.

கேள்வி :

நீக்கப்பட்ட வேட்பாளர்களின் சீட்டுக்களில் எந்தவொரு விருப்பு வாக்குகளும் ஏ.யிற்கும் பீ யிற்கும் வழங்கப்படா விட்டால் தீர்மானம் எப்படியாதாக அமையும்?

பதில் :

இதன்போது, ஏ.யினதும், பீ. யினதும் ஏற்கனவே இருந்த வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.

கேள்வி :

ஏ. வேட்பாளரினதும் பீ. வேட்பாளரினதும் விருப்பு வாக்குகள் கணிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் பெற்ற வாக்குகள் சமமானதாக இருந்தால் முடிவு எவ்வாறு அமையும்?

பதில் :

இருவரும் ஒரே கணக்கில், ஒரு வாக்கு கூட அதிகமாக பெறாத சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்பது குறித்து சட்டம் அதற்கும் ஒரு வழியைச் சொல்லியுள்ளது.

இரு வேட்பாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டு திருவுளச் சீட்டு போடப்படும். சீட்டில் வெற்றிபெறும் ஒருவருக்கு ஒரு வாக்கினை வழங்கி ஆணைக்குழு வெற்றியைத் தீர்மானிக்கும்.

நேர்கண்டவர் – கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>