ஜனாதிபதியின் காத்திரமான தீர்மானம்: 9 ஆம் திகதி உடன்படிக்கையும் ?


Maithree-and-Mahinda+gossip

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இணைந்து செயற்படுவதற்கு இரு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒரு ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலும் மற்ற ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலும் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சகோதார தேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவும் (5) விசேட பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் கிடைக்கப்பெறவுள்ளது. பின்னால் வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கதிரை சின்னத்தில் போட்டியிடவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இரு தரப்பும் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும், இது தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் புதன்கிழமை (9) அனுராதபுரத்தில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீண்ட காலமாக ஜனாதிபதித் தேர்தலில் என்ன தீர்மானத்தை எடுப்பது என்பது தொடர்பில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவதற்கு தீர்மானம் எடுக்கப்படாதிருந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை மோசமானதாக அமைந்திருக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

இப்போதும், கட்சியிலுள்ள அனைவரையும் தன்னுடன் வைத்துக் கொண்டு கட்சியின் அடையாளத்தையும் இழக்காது தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் பல. அம்முயற்சிகளின் காத்திரமான ஒரு நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாக கூறுவதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் இணைய முடியாது விலகிச் சென்ற மஹிந்த தரப்பினர் தான் தற்பொழுது பொதுஜன பெரமுனவாக உருவாகியுள்ளதாகவும் விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆளுமையின் பின்னால் ஒன்றுகூடிய கூட்டமே அதுவெனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அடையாளம் கூறப்படுகின்றது.

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பின்னால் உள்ள இந்த அணிக்கு எந்த கட்சியின் பெயரை வைத்தாலும், எண்ண வர்ணத்தை வழங்கினாலும் அது ராஜபக்ஸாக்களின் கையசைவிலேயே செயற்படப் போகின்றது என்பது அவர்கள் மீதுள்ள பொதுவான அபிப்பிராயமாகும். பொதுஜன பெரமுனவுடன் உள்ள கூட்டணிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் முகவரியாக இருந்து கொண்டிருக்கின்றார் என்பது அரசாங்க தரப்பிலுள்ள சகலரினதும் ஏகோபித்த கருத்துக்களாகும்.

எஞ்சியுள்ள ஜனாதிபதி  தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் ஒரு குழுவும் காணப்படுவதாக சாதாரண பொது மக்களிடமும் ஒரு கருத்து நிலவியது. ஜனாதிபதியின் தீர்மானம் இப்படிக் கூறப்படுவது போன்று அமைந்தால், அவர்களது நிலைப்பாடு அரசியல் களத்தை சூடேற்றும் என்பது மட்டும் நிச்சயமாகும்.

அவர்கள் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த மாட்டார்கள். மாறாக தனித்தனியாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய விருப்பமில்லாத கடும்போக்கு சிலரே இவ்வாறு நிர்ப்பந்த தீர்மானத்துக்கு உட்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் வாக்கினால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் இவ்வாறான தீர்மானத்துக்கு வந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது சார்பானதாகவே அமையும்.

ஏனெனில், கட்சியாக பாரிய நிபந்தனையின் கீழ் கூட்டணி அமைப்பதை விடவும் தனியாக இணைத்துக் கொண்டு வாக்குப் பலத்தை அதிகரிப்பதை ஐ.தே.க. ஒரு பலமாகவே கருதும். ஜனாதிபதி இவ்வாறு தீர்மானத்தை எடுத்தாலும், பொதுஜன பெரமுனவை ஆதரிக்காமல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டிக் காக்கும் பண்டாரநாயக்க பரம்பரையைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தரப்பினர் மாற்றுத் தீர்மானத்துக்கு செல்வார்கள் என்பது இலகுவாக யோசிக்க முடியுமான ஒரு அம்சமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது எட்டாக் கனியாக இருக்கும் போது, பொதுஜன பெரமுன ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஊடகங்களின் முன் தோன்றி தெரிவித்த கருத்துக்கள் இங்கு மீண்டும் நினைவு கூறப்படத்தக்கவை.

அதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய வாக்குகள் அனைத்தும் பொதுஜன பெரமுனவுடன் தான் உள்ளதாகவும், தற்பொழுதுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தேசிய ரீதியில் பார்த்தாலும், 3 லட்சம் வாக்குகளே உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவினர் விமர்சனம் செய்திருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தாருங்கள் அல்லது மஹிந்தவை பிரதமராக்குவோம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் கூட்டணி அமைப்போம் என்ற பெரும் கோரிக்கைகள் எதுவும் சாத்தியப்படாது போயுள்ளன. இறுதியாக கூட்டணி அமைத்த பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சின்னத்தையாவது மாற்றுவோமே என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விதித்த நிபந்தனையும் கைகூடாத நிலையில் கூட்டணி அமைக்கப்பட ஏற்பாடாகி வருவதாகவே விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எப்படிப் போனாலும், எதிர்வரும் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்படும் ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உண்மையில் தக்க வைத்துள்ளதா? என்ற கேள்வி பலரிடத்திலும் எழுவது நியாயமானது.

பொதுஜன பெரமுனவின் மானசீக வெற்றிப் பலத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு அவசியம் என்பதை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ எந்த சந்தர்ப்பத்திலும் புறக்கணித்து கருத்துத் தெரிவிக்க வில்லையென்பது ஊடகங்களில் அரசியல் தொடர்புள்ள சகலருக்கும் தெரியும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது கூட்டணியில் இணைவதற்கு இந்நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்ற மாயையைக் கிளப்பி விட்டுள்ள மத தீவிரவாத சக்திகளின் மறைமுக அழுத்தங்களும் காரணிகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 11.00 மணிக்கு இது குறித்த தீர்மானத்தை ஜனாதிபதி நாட்டுக்கு  அறிவிக்கவுள்ளதாகவும்  ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

— கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>