இன்னும் 19 நாட்கள்: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையாளர்


elec

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், தேர்தலை பாதிக்கக் கூடிய வகையில் பாரிய முறைகேடுகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வழமைபோன்ற சாதாரண முறைப்பாடுகள் மட்டுமே பதியப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதியப்படவில்லை. முறைப்பாடுகள் அத்தனையும் தேர்தல் குற்றமாக இதுவரையில் உறுதிப்படுத்தப் படவில்லை. முறைப்பாடுகளில் உண்மைத்தன்மையும் வெளிப்படுத்தப்படவில்லை.  தேர்தல் விதிகளை மீறும் வேட்பாளர்களின் பிரசார உத்திகள் காணப்பட்டாலும் கூட அதனைப் பெரும் சவாலாக நோக்க முடியாது.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் செயலகமும் தபால் துறையும் இணைந்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காலகட்டத்தில் சகல பிரதேசங்களிலும் கணிசமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளது. நடக்கும் சம்பவங்கள் எதுவும் தேர்தலுக்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாதென்றே நம்புகின்றேன்.

பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் நாடு பூராவும் பாதுகாப்பு உசார் நிலையிலே வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் கடைசி வாரத்தில் மேலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படும்.

அதே சமயம் தேர்தலைக் கண்காணிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் சுமார் 100 பேர் இங்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய அமைப்பு, தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் குழுக்களாகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நாடெங்கும் சென்று கண்காணிப்புக்களை மேற்கொள்ள போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுக்கள் சுயாதீனமாகவே செயற்படும். அதில் எமக்கு எவ்விதமான தலையீடுகளும் கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் தத்தமது நாடுகளுக்குச் சென்ற பின்னரே அது குறித்த அவர்களது அறிக்கைகளை வெளியிடுவர். அதே சமயம் தேரதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் முப்பது பேர் கொண்ட கண்காணிப்புக்குழு தேர்தல் நடக்கும் தினத்தின் அவதானிப்புக்களை நடத்தவுள்ளனர்.

இவர்கள் முக்கியமான பிரதேசங்களுக்குச் சென்று கண்காணிப்புகளை முன்னெடுக்க போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதேசமயம் பிரசார நடவடிக்கைகளின் போது முடியுமானவரை விதிமுறைகளைப் பேணுமாறு நான் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

முக்கியமான ஒரு விடயம், கடந்த காலத் தேர்தல்களைப் போல் பதாதைகளோ, சுவரொட்டிகளோ பெரிதாகக் காணப்படவில்லை. இது ஒரு ஆரோக்கியமான செயலாகும். தேர்தலை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் தேர்தல் ஆணைக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 13ம் திகதி நள்ளிரவுடன் சகல பிரசார நடவடிக்கைகளும் முற்றுப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரசார சூனியகாலத்தில் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் எவராவது ஈடுபட்டால் அவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவசியப்படுமானால் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவும் தயங்கப் போவதில்லை. இந்த ஒழுங்கு விதிகளை சரியாக கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களில் நேற்றுவரை 29 பேர் தமது வருமான சொத்து விபரங்களை ஒப்படைத்துள்ளனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 10 ஆயிரம் “ஹாட்போர்ட்” பெட்டிகளை பயன்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வந்த பலகையிலான பெட்டிகளை மட்டுப்படுத்துவதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

400 வாக்காளர்களுக்கு குறைவாக உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மாத்திரம் பலகையிலான பெட்டிகளை வழங்கவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ள“பிளாஸ்டிக்” பெட்டிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>