சஜித்தின் கூட்டத்தில் ரணிலின் கேள்வி


Ranil

தேர்தலுக்கு முன்னதாகவே எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்கள் நிராயுதபாணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருக்கிறார்கள் எனவும், அதிகாரத்திற்கு வரமுன்பே இவ்வாறு செயற்படுகின்றார்கள் எனின், அதிகாரத்தைக் கைப்பற்றினால் எவ்வாறு செயற்படுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேன்று (07) தெனியாய நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நாம் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி எமது எதிர்காலத்திற்காகவே வாக்களிக்கப் போகின்றோம். வேறு எதற்காகவும் அல்ல. தற்போது காணப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும், சுதந்திரத்தையும் தொடர்ந்து முன்நோக்கிக் கொண்டு செல்வதா? அல்லது இருண்ட யுகமொன்றுக்குள் செல்வதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

எமது அரசாங்கம் என்ன செய்தது என்று சிலர் கேட்கின்றார்கள். சமுர்த்திக் கொடுப்பனவு தொகையை அதிகரித்தோம். மாபொல புலமைப்பரிசில் தொகையையும் அதிகரித்தோம். பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதியை அறிமுகம் செய்தோம். ‘ரன்மாவத்’ திட்டத்தின் கீழ் வீதிகள் புனரமைக்கப்பட்டன.

‘கம்பெரலிய’ வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். இந்த நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை இருமடங்கினால் அதிகரித்தோம். ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் புதிய பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணித்தோம். ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தோம். பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தினோம். பல்கலைக்கழகத்தில் புதிததாக 23 பீடங்களை உருவாக்கினோம்.

அதேபோன்று சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தோம். நீதிமன்றம், பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்தினோம். ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்தி அதேவேளை, தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கினோம். வெள்ளை வான் கலாசாரத்தை முடிவிற்குக் கொண்டுவந்தோம். அதன் காரணமாகவே இன்று நியாயமான தேர்தலொன்றை நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் சிலர் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் நாம் நல்லாட்சி அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றினதும் விலைகளைக் குறைத்தோம்.

ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்புவரை காலத்தில் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பொதுஜன பெரமுவினருக்கு இப்போதேனும் பொருட்களின் விலைகளைக் குறைக்கக்கூடிய இயலுமை இருக்கின்றதா? சமையல் எரிவாயுவின் விலையையும் குறைத்தோம்.

அதற்கான நெருக்கடி நிலையொன்று தற்போது ஏற்பட்டுள்ள போதிலும், அதனை நாம் சரிசெய்வோம். ஆனால் மஹிந்தவின் ஆட்சியில் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாத அவர்கள் இப்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதாக எவ்வாறு கூறமுடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>