எமது வாக்குரிமையை தவற விடுவது நாம் விரும்பாத ஒருவர் ஆட்சி பீடமேற வழியமைக்கும் !


palling

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் விசேட ஏற்பாடாகவுள்ள, நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனநாயக நாடொன்றின் இலட்சணமாக அமைந்துள்ள இந்த தேர்தல், நாட்டிலுள்ள வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என்பதை முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லையென்பது  கவலைக்குரிய அம்சமாக பேசப்படுகின்றது.

இதற்கு பிரதான காரணம், போதிய அரசியல் அறிவு இன்மை என்பதை விடவும், அரசியல் குறித்த அதிருப்தி நிலையே என்று கூறினால் அது மிகையாகாது. ஒவ்வொரு தேர்தல்களின் போதும் குறைவில்லாமல் இழுத்து வீசப்படும் மனித உணர்வுகளைத் தொடும் வாக்குறுதிகள், தேர்தல் வெற்றியின் பின்னர் காற்றில் பறக்கும் பஞ்ஜாக மாறிவிடுகின்றன. இவை பழைய குருடி கதவத் திறடி என்ற நிலைக்கு அதிகாரத்தில் அமர்பவர்களிடம் மாறிவிடுவது மரபாகியுள்ளது.

இந்த மரபு நிலையை கல்வியறிவில் பின்தங்கிய காலத்திலும், அரசியலில் கண்மூடித்தனமாக மூழ்கிப் போன காலத்திலும், வாழ்ந்த மக்கள் அங்கீகரித்திருந்தனர். இருப்பினும், தகவல் தொழில்நுட்பத்தின் விருத்தியினால் கல்வித் தரம் உயர்ந்துள்ள இக்காலத்தில் வாழும் மக்கள் இந்த மரபு நிலைமையை வெறுக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்போது ஜனநாயகத்தின் ஆணி வேராக கொள்ளப்படும் ஊடக சுதந்திரம் தலைதூக்கிக் காணப்படுகின்றது. தவறு செய்பவர்களும், மக்களை ஏமாற்றுபவர்களும் வெகுசன ஊடகங்களின் மூன்னால், தப்பித்துக் கொள்வது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல என்ற நிலைமை எமது நாட்டிலும் உருவாகியுள்ளது.

இதனால், வாக்கின் பெறுமதியை விளங்கிய மக்கள் அசிரத்தை எடுப்பதை  அங்கீகரிக்க முடியாது என்ற நிலைமை தோன்றியுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற  ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்களின் உரிமையை உறுதி செய்வதற்காக பெரும் தொகை பணத்தை தேர்தல்கள் ஆணைக்குழு செலவு செய்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் அரசாங்கம் 360.00 ரூபாவை செலவு செய்வதாக தேர்தல் வன்முறைகள் குறித்து கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மஞ்ஜுல கஜநாயக தகவல் வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக 550 கோடி ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த செலவின் அடிப்படையில் ஒரு வாக்காளரின் செலவு கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் மஞ்ஜுல கஜநாயக்க மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டின் வடக்கு, கிழக்கிலும் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கருத்திற்கொண்டு தங்களது வாக்குகளை சுதந்திரமாக செலுத்த வேண்டும் என்று  தமிழர்களின் புலம்பெயர்ந்த அமைப்புகளின் கிளை அமைப்பான உலக தமிழர் பேரவை நேற்று முன்தினம் விசேட அறிக்கையின் மூலம் தமிழ் மக்களைக் கேட்டிருந்தது.

பொடுபோக்காக இருந்து உதாசீனமாக வீணாக்கப்பட்ட வாக்குகள், தமது விருப்பத்துக்கு மாறான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் என்பதையும் மறக்கக் கூடாது என்றும் அப்பேரவை அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது முக்கிய அம்சமாகும்.

இலங்கையின் காலனித்துவ காலத்தில் 1910 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த குரு மக்கலம் சீர்திருத்தத்தில் முதன் முதலாக நாட்டிலுள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை வழங்கப்பட்டது.

பின்னர் உரிமைக் குரல்களின் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாக1931 ஆண்டு டொனமூர் சீர்திருத்தத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது என்பது எமது அரசியல் வரலாற்றுத் தகவல்களாகும் . இது 21 வயதை அடைந்த இலங்கையர்கள் அனைவருக்கும் என அறிமுகம் செய்யப்பட்டதும் அதன் சிறப்பம்சமாகும்.

இந்த அடிப்படையில் ஜனநாயகத்தின் படிமுறை வளர்ச்சியின் உச்ச கட்டமாக கொள்ளப்படும் ஒரு முன்னேற்றமாக 1947 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சோல்பரி யாப்பின் கீழ், 1960 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக வாக்குரிமை பெறும் வயதெல்லை 18 ஆக குறைக்கப்பட்டதை எமது நாட்டின் வாக்குரிமை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது அரசியல் யாப்பான1978 ஆண்டு அரசியல் யாப்பில் இந்திய வம்சாவழித்  தோட்டத் தொழிலாளர்கள் உட்பட  நாட்டிலுள்ள சகலருக்கும் வாக்குரிமை என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டமே இன்று வரை ஜனநாயகத்தின் அடையாளமாக இருந்து வருகின்றது.

ஆட்சியாளர்களையும், பொது மக்களையும் இணைக்கும் பாலமாக விளங்கும் இந்த வாக்குரிமை என்பது ஒரு பெரும் பலமும், சக்தியுமாகும் என்பதை இன்று அனைவரும் விளங்கியே வைத்துள்ளனர். தமக்கு பொருத்தமான வாக்காளர்களை தெரிவு செய்து அவர்களின் மூலம் சுபீட்சமான ஒரு ஆட்சியை அமைத்துக் கொள்வதே இந்த வாக்குரிமை வழங்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களில் எந்த வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தமக்கும் நாட்டுக்கும் பொருத்தமானது என்பதை வைத்தே ஒருவர் தனது வாக்கை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை விளக்குவதற்கு கடந்த ஓக்டோபர் 7 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்த தினம் முதல் நேற்று முன்தினம் (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 35 வேட்பாளர்களும் தத்தமது வசதிகளுக்கு ஏற்ப, அந்த விஞ்ஞாபனங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென மக்கள் ஆறஅமர யோசித்து தீர்மானம் எடுப்பதற்காகவே நேற்றைய தினமும் (14) இன்றைய  தினமும்(15) பிரசார சூனிய தினங்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த தினங்களில் தேர்தல் பிரசாரங்களுக்கு  முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு கட்டங்களை தாண்டியே ஒருவர் வாக்காளராக தகுதி பெறுகின்றார். இந்த ஒவ்வொரு கட்டத்துக்கும் அரசானது, பெரும் செலவுக்கு மத்தியில் ஆளணியை இயக்கி செயற்படுகின்றது. மட்டுமல்லாது, தேர்தலுக்கான பிரத்தியேக செலவுகள் என ஒரு பக்கம் வான் உயர்ந்து காணப்படுகின்றது.

இத்தனையும் இந்நாட்டில் வாழும் ஒரு பிஜையின் வாக்குரிமையை உறுதி செய்வதற்காக அரசு சட்ட ரீதியாக மேற்கொள்ளும் ஏற்பாடுகளாகும். இந்த உண்மைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பல்வேறு கட்டங்களில் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வந்திருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையில், தேர்தலை புறக்கணிக்குமாறும், வாக்களிலிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் தனிப்பட்ட நபர்களினாலும், அமைப்புக்களினாலும் எழுந்தமாறியாக அநாமதேய  அறிவித்தல்கள் விடுக்கப்படுவது தொடர்பில் சாதாரண பொது மகன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாட்டுப்பற்றுள்ள ஒரு குடிமகனின் உணர்வுகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

குரங்கின் கையில் கிடைத்த மலர் மாலையைப் போன்று இந்த வாக்குரிமையைப் பார்ப்பவர்களுக்கே அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்று கூறினால் அது தவறாகாது.

நாட்டுப் பிரஜைகளுக்கு வாக்குரிமைகளை வழங்கியது மட்டுமல்லாது, அதனைப் பயன்படுத்துத்தும் போது, மக்களுக்கு அவர்களது சமய, கலாசார ஒழுங்கு விதி முறைகளைப் பேணி செய்து கொள்வதற்கும் அரசு ஏற்பாடுகளை செய்துள்ளதானது இந்நாட்டுப் பிரஜையொருவர் பெற்றுள்ள அருள்களாகும் என்றே கூற வேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் ஒழுங்கு தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ விசேட அறிவிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அதில், ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும். பதுகாப்புக் கடமைகளிலிருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தமது அடையாளத்தை விரைவாக உத்தரவாதப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பை விரைவாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும்  எனவும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அதில் மேலும் கூறிப்பிட்டிருந்தார்.

நாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குரிமை இன்னுமொருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்பதற்காக கடுமையான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இதற்காகவே, வாக்களிக்கச் செல்லும் ஒரு வாக்காளர், தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும் எனவும், இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்நாட்டு முஸ்லிம்களிடத்தில் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்பில் நேற்று முன்தினம் (13) அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தது. ஒருவர் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் அதில் பின்வருமாறு வரையறுத்துக் கூறப்பட்டிருந்தன.

  1. தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று வாக்களித்தல்
  2. வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் ஒத்தாசையாக இருத்தல்
  3. வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் எடுத்துச் செல்லல்
  4. முகத்திரை அணியும் பெண்கள் தமது முகங்களை திறந்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்த ஒத்துழைத்தல்
  5. பெண்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லல்
  6. தூர வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்பவர்கள் முடியுமான வரை வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்குகளை செய்து கொள்ளல்
  7. வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்பிவிடுதல்

போன்ற ஆலோசனைகளை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்நாட்டு முஸ்லிம்களுக்கு குறிப்பாக வழங்கியுள்ளது.

கடந்த காலங்களை விடவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு விடயங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றது என்பதை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். இந்த விசேட தன்மைகளுடன் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத, வன்முறைச் சம்பவங்கள் குறைந்தளவு இடம்பெற்ற ஒரு தேர்தல் என்ற விடயமும் இணைந்து கொள்கின்றது என்பதனை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

கடந்த காலங்களைப் போன்று வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே இந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெறவில்லை. வேட்பாளர்களும், பொது மக்களும் ஓரளவுக்கேனும் பொறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று முன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய ஏற்பாடாக அமைந்துள்ள எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் வாக்குரிமை பெற்றுள்ள அனைவரும் தமது வாக்குகளை பயன்படுத்துவது தார்மீகப் பொறுப்பாகும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.

  • கஹட்டோவிட்ட முஹிடீன் 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>