ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரை – தொகுப்பு


gy

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அநுராதபுரம் ருவன்வெலிசாய புனித பூமியில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். ஜனாதிபதியின் உரைத் தொகுப்பை டெய்லி சிலோன் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் நாட்டின் நலனுக்காக எனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஒருபோதும் நான் பின்நிற்கப் போவதில்லை.

எதிர்கால சந்ததிக்காக சிறந்த சுபீட்சம் மிக்க ஊழல் மோசடிகளற்ற சட்டத்தை மதிக்கின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எம்முடன் சகலரும் அணிதிரளுமாறும் நான் அழைப்பு விடுக்கின்றேன்..

தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் தமது ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்த முன்னெடுப்பேன். மக்கள் வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசாங்கத்தை நான் ஸ்தாபிப்பேன்.

நாட்டின் சிங்கள மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் மூலமே இத்தகைய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

அனைவரும் நேசிக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைத்தளபதியாகவும் உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ள பாதுகாப்பு அமைச்சராகவும் உரையாற்றுகின்றேன்.

எனது வெற்றியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதமாகும். அதேபோன்று எனது வெற்றிக்கு இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவே வித்திட்டுள்ளது. சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.

நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்தேன். நீங்களும் இந்த வெற்றியின் பங்காளர்களாக வேண்டும் எனக் கோரினேன். எனினும் அதன் பிரதிபலன் நான் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

எனினும் புதிய ஜனாதிபதியாக விடுக்கும் வேண்டுகோள் இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் ஒரே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணையுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நான் எனது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு எனது கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் ஜனநாயக வாக்குரிமைக்கு மதிப்பளித்து எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கிய பெறுமதியான வாக்குக்காகவும் நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

தெற்கில் சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்த நான், எனது கல்வியை நாட்டின் பிரபல பாடசாலையான கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் மேற்கொண்டேன். அதனால் எப்போதும் எனது சிந்தனையில் பௌத்த சித்தாந்தம் நிறைந்துள்ளது. பௌத்த தரிசனத்தில் நீதி, வாய்மை உள்ளிட்ட நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.

சகல இன, மத மக்களுக்கும் உரித்தான அரசாட்சியையே முன்னெடுப்பேன். எனது ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் பௌத்த தரிசனத்தைப் பாதுகாத்து அதனை வலுப்படுத்துவதற்கும் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக்கொண்ட சிங்கள கலாசாரம், மரபுரிமையை நாம் எப்போதும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம். எமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் எமது என்ற உணர்வையும் பாதுகாப்பதற்கு அரச அனுசரணையைப் பெற்றுக்கொடுப்பேன்.

நாட்டின் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த அமைதி, சகவாழ்வு ஆகியவற்றை அனைத்து பிரஜைகளுக்கும் அவர்களது இன, மத, தனித்துவத்தோடு பாதுகாத்து கௌரவமாக வாழக்கூடிய உரிமையை நாம் எப்போதும் பாதுகாப்போம்.

எனது தேர்தல் வெற்றியில் எவரும் உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எனது கௌரவபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அவரது பிறந்தநாளான இன்றைய தினத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வெற்றியின் பாரிய பலமாக அமைந்த பொது ஜன பெரமுனவின் ஸ்தாபகரான கட்சியின் தேசிய அமைப்பாளர பஷில் ராஜபக்ஷவுக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர் மற்றும் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட சகல உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

எனது வெற்றிக்குப் பெரும் பங்களிப்புச் செய்து எப்போதும் எம்மோடு இணைந்து செயற்படும் அரசியல் கட்சிகள் அதன் உறுப்பினர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள். அதேபோன்று தேர்தலில் எமக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் எனது நன்றிகள். ஒரு போதுமில்லாதவாறு பல்வேறு துறைசார்ந்த பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு எனக்குக் கிடைத்தது.

எனது தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடாத இலட்சக்கணக்கான மக்கள் சுயாதீனமாக எமக்காக செயற்பட்டனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் அமைப்புகள், வர்த்தக சமூகம், புத்திஜீவிகள், கலைஞர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், எனக்கு வாக்களிப்பதற்காக நாடு திரும்பிய இலங்கையர்கள் மற்றும் இளைஞர்களும் எனது வெற்றிக்காக வழங்கிய பங்களிப்புகளை நான் பாராட்டுகிறேன். அவர்கள் என்னை நேரில் சந்திக்காவிட்டாலும் நாட்டுக்கான அவர்களது கடமையை நிறைவேற்றினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவதே தற்போதுள்ள முக்கிய விடயமாகும்.

சுபிட்சம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். எனது கொள்கை, விஞ்ஞாபனம் மூலம் எம்மால் நாட்டிற்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது முக்கிய நோக்கம். நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாத்து இந்த வேலைத்திட்டம் இந்த நாட்டின் சகல மக்களுக்காகவும் நடைமுறைப்படுத்தப்படும். அது மக்கள் பெருமையுடன் வாழக்கூடிய சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டமாகும். அவை அனைத்தையும் எனது ஆட்சிக்காலத்தில் நான் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் பாதுகாப்பு எனது அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டமாகும். எமது தாய்நாட்டை பயங்கரவாதம், பாதாள உலகக் குழுவினரிடமிருந்தும் கப்பம் பெறுதல், போதைபொருள் வர்த்தகம், பெண்கள் , சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்தையும் இல்லாதொழித்து பதுகாப்பான நாம் அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நட்புடன் செயற்படுவோம்.

உலக அரசியலில் பல்வேறு இனங்கள் தொடர்பான போராட்டங்களில் சம்பந்தப்படுவதற்கு எமக்கு எந்தவித அவசியமும் கிடையாது. அதேபோன்று எம்முடனான தொடர்புகளின் போது எமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் மதிப்பளிக்குமாறு நாம் சகல நாடுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்கால தலைமுறைக்காக சூழலைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதற்கிணங்க ஐ. நா. வின் நிலையான வேலைத்திட்டங்களில் உலகின் முன்னிலை நாடாக இலங்கையை உருவாக்குவோம்.

இந்த தேர்தலோடு நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கில் எதிர்தரப்பினருக்கு பாதிப்பில்லாத அத்துடன் பிளாஸ்டிக், பொலிதீன் அற்ற பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னுதாரணமாக செயற்பட எம்மால் முடிந்தது. அரச நிர்வாகத்திற்கு இந்த முன்னுதாரணம் பேணப்படும். சட்ட ஆதிபத்தியத்திற்கு மதிப்பளிக்கும் சமூக நிதியைப் பாதுகாக்கும், ஊழல் மோசடியற்ற நிலையான அரச நிர்வாகம் மீள இந்த நாட்டில் உருவாக்கப்படும் என உறுதியளிக்கின்றேன்.

தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை, எமது நிர்வாக முறையின் பொறுப்புகளின் கீழ் திறமைக்கு முன்னுரிமையளித்து செயற்படுத்துவோம்.

நாட்டின் எதிர்கால சந்ததிக்காக நிறைவேற்ற பல பொறுப்புகள் எம்முன் உள்ளன. பூகோள பொருளாதாரத்தில் உச்ச பயனை அடைவதற்காக அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள எமது மக்களைத் தயார்படுத்துவோம். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நவீன தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும். நீதி, நேர்மை, நல்லொழுக்கம் மிகுந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

ஜனாதிபதி என்ற வகையில் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அதனை மேற்கொள்வதே எனது எதிர்பார்ப்பு. எனக்கு வாக்களித்த மக்களின் குடியுரிமையை நான் பாதுகாப்பேன். எமது கொள்கை பிரகடனத்திற்கிணங்க மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

எமக்கு முன் அதிக பொறுப்புகள் உள்ளன. குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் உள்ளன. செய்ய வேண்டுமென நினைத்தால் எம்மால் முடியாதது என ஒன்றுமில்லை. அவை வெற்றிகொள்ளக் கூடிய சவால்களே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நோக்கம் எம்மிடமுள்ளது. அதற்கான திட்டங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கிணங்க மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்.

நான் இந் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக எனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.

அதற்கிணங்க சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புதற்காக மக்களால் பெற்றுக்கொடுக்கப்படுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு எமது கொள்கைக்கிணங்க செயற்படுத்தும் புதிய அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.

நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். எனது நாடு தொடர்பில் பெரு மையடைகிறேன். எனது நாடு தொடர்பில் எனக்கு தரிசனம் உள்ளது. எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு என்னுடன் அணிதிரளுமாறு சகல நாட்டை நேசிக்கும் மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>