
கடந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் கொண்டுவந்த 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தைச் செயலிழக்கச் செய்வது பொருத்தமான ஒரு நடவடிக்கை அல்லவென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை எந்தவித தலையீடும் இன்றி நடாத்துவதற்கு வழியமைத்ததும் இந்த 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (28) ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்துக்கு எந்தவொரு அழுத்தங்களையும் கொடுக்காத ஒரு அரசாங்கமாக செயற்படுவதற்கு கடந்த அரசாங்கத்துக்கு முடியுமாக இருந்தது. நீதிமன்ற சுயாதீன ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு என்பனவும் இந்த 19 இன் ஊடாகவே அமைக்கப்பட்டன.
சிலர் இந்த 19 ஐ நீக்க இன்னுமொரு திருத்தத்தைக் கொண்டு வர முடியுமா எனக் கேட்கின்றனர். ஏன் இதனை மாற்ற வேண்டும். இந்த 19 இனால் தான் ஆணைக்குழுக்கள் அனைத்தும் செயற்பட்டன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)