பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல, நான் அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் – பைஸர் முஸ்தபா


Faiser faiszer mustapha  faizer

பட்டமும் பதவியும் எனது கொள்கையல்ல. நான் அவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.எனக்கென்று ஒரு கொள்கை உள்ளது. நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தெரிவித்திருந்ததை நாம் அறிவோம். இதனை அனைவரும் வரவேற்க வேண்டும்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாமைக்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, நான் இரண்டு முறை அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை, இளைஞர்களுக்கே வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதியின் இக்கூற்றை, உண்மையில் வரவேற்கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொள்கைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. இக்கட்சியைப் பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் கட்சிப் பற்றாளர்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும். இந்நிலையில், கட்சியின் தீர்மானங்களுக்கு அப்பால் நானும், எமது கட்சிப் பற்றாளர்களும் இம்மியேனும் நகரமாட்டோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் டீ.ஏ. ராஜபக்ஷ் ஆகியோர் அரும் பாடுபட்டு வளர்த்தெடுத்தனர். கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தடம் புரளாது இக்கட்சி நிலைத்து நிற்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சுதந்திரக் கட்சியின் நன்மைக்காக, அதன் எதிர் கால நலனுக்காக புதிய ஜனாதிபதியோடும், புதிய பிரதமரோடும், புதிய அரசாங்கத்தோடும் எமது கட்சி பேசும். அது எமது கட்சிக்கு உரித்தானது. அதில் எவ்விதத் தவறுமில்லை.

நாம் சிறந்த கொள்கையுள்ள கட்சிப் பற்றாளர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்பதை, எமது இலங்கை வாழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

என்னிடம் அரசியல் நோக்கம் கிடையாது. சமூக நோக்காகக் கொண்டே நான் அரசியல் செய்கிறேன். நான் முஸ்லிம் மக்களை மதித்து, என்றும் அவர்களை நேசிப்பவன். முஸ்லிம் சமூகம் நாட்டுப்பற்றுள்ள சிறந்த சமூகம் என்பதை, நாம் இலங்கை வாழ் ஒவ்வொரு மக்களினது உள்ளங்களிலும் உணர்த்த வேண்டும்.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைக்கப்படுவதை, என்னாள் ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்கவோ அல்லது அனுமதிக்கவோ முடியாது. முஸ்லிம் சமூகத்துக்கு ஏதாவதொரு பிரச்சினை ஏற்படும் என்றிருந்தால், அப்பிரச்சினை தீரும் வரை, அவர்களுக்காக பாராளுமன்றிலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையிலேயே நான் அப்பொழுதும் இப்பொழுதும் இருக்கின்றேன் என்பதையும் இங்கு மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.(அ)

-ஐ. ஏ. காதிர் கான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>