மூதூரில் அடை மழை காரணமாக மக்கள் பாதிப்பு


IMG-20191204-WA0001

தற்போது இலங்கை முழுவதும் பருவ பெயிர்ச்சி மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மழை வீழ்ச்சியின் அளவு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் மூதூரிலும் தொடராக நான்காவது நாளாகவும் அடைமழை பெய்து வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்பகைந்துள்ளதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர் இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் :’

இவ் அடைமழை இயற்கையாகவே தாழ்ந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் பல அளெகரியங்களுக்கு உள்ளாகி வருவதை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டேன்.

இவ்வாறு மழை நீர் தேங்கி நின்று நீர் வடிந்தோட முடியாமல் காணப்படுவதினால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே, இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முதல் வழிமுறை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலிருந்து வடிச்சல்களை அடையாளங்கண்டு உடனடியாக நீரை வடிந்தோடச் செய்தல் வேண்டும்.

இவ்விடயத்தில் பிரதேச சபையானது அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். அவ்வாறான வேலைத்திட்டங்களை மூதூர் பிரதேச சபை தற்போது செய்து வருவது பாராட்டுக்குரியது.

அதுபோல் மூதூரில் பிரதான வடிச்சல் பகுதிகளை அத்துமீறி தடைசெய்து நீர் வடிந்தோட முடியாதவாறு கட்டடங்களையும், நில அபகரிப்புகளையும் மேற்கொண்டுள்ளவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதனை உடனடியாக அகற்றி தேங்கி நிற்கும் நீரை வடிந்தோடச் செய்வதும் அவசியமாகும்.

மேலும், தற்போது நிலவும் அசாதாரண காலநிலையினால் மக்களுக்கு தொற்றுநோய்களும், டெங்கு போன்ற அபாயகரமான நுளம்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

இவ்விடயத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி நிலையம் அதிக கவனம் செலுத்தி வருவதோடு சுற்றுப்புறச் சூழற் பாதுகாப்பையும் பேணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடயங்களில் தொடர்ந்தும் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் அவதானமாக செயற்படுவது சிறந்தது.

இவ்வாறான காலப்பகுதியில் பிரதேச மட்டங்களில் இயங்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், சமூக சேவை நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள் என்பன முன்வந்து மக்கள் நலன் சேவைகளில் விரைந்து செயற்பட வேண்டும்.

அவ்வாறாக நாம் செயற்படுகின்ற போது எமது பிரதேசத்தை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். அவ்வாறான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றே நமது மக்களும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

அதுபோல் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தங்குமிட ஏற்பாடுகள் நிவாரண உதவிகள் போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை அரசாங்க சுற்றுநிருபத்திற்குட்பட்ட வகையில் மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் கிராம உத்தியோகத்தர் மட்டங்களில் பணிபுரியும் தமது உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>