முகவரியைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்தில் ஸ்ரீ ல.சு.க.


question

பல்வேறுபட்ட நிபந்தனைகள் போடாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறச் செய்ய எதிர்வரும் பொதுத் தேர்தலில் நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று விடுத்திருந்த அறிவிப்பு அக்கட்சியின் எதிர்கால நகர்வு குறித்த நெகிழ்வுப் போக்கை எடுத்துக் காட்டுகின்றது.

பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்தால், அது பொதுச் சின்னத்தின் கீழ் மட்டுமே அமையும் எனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது எனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைச்சாத்திட்டது.

தற்பொழுது, பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  ஏனைய கட்சிகளைப் போன்று கூட்டணியில் இணைந்து கொள்வதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பொருத்தமானது எனவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை மறந்த நிலையில் அவர்கள் கூறிவருகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகளினால் அக்கட்சிக்குள் உருவாகியுள்ள  சிறிய குழுக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியை பல துண்டுகளாக உடைத்துவிடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வருகையினால் நடைபெறாமல் ஒத்திவைக்க நேர்ந்தமையும், கட்சியின் தலைவர் மற்றும் அரசாங்கத்திலுள்ள கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் எவரும் அதில் கலந்துகொள்ளாது தவிர்ந்து கொண்டமையும் ஊடகங்களில் செய்தியாக மாறியிருந்தன.

அக்கட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உரிமையாளர்கள் எனக் கூறிக் கொள்ளக் கூடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குழுவினர், மஹந்த ராஜபக்ஸ ஆதரவு குழுவினர், ஐக்கிய தேசியக் கட்சியை சரிகாணும் குழுவினர், பொதுஜன பெரமுனவுக்கு எதிரான குழுவினர் என பல குழுக்கள் உருவாகியுள்ளன.

இந்த அத்தனை குழுக்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு சார்பான தீர்மானத்தை கட்சி எடுக்காது போனால் திருப்தியடைய மாட்டார்கள் என்பது அண்மைய அரசியல் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலை முகம்கொடுப்பது தொடர்பில் அடுத்து வரும் ஓரிரு வாரத்துக்குள்  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

விரிவான அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சகல இனங்களையும் அரவணைத்துக் கொண்டு தேர்தல் வெற்றியை நோக்கிச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்று கூட்டு எதிரணியில் அங்கம் வகித்த 17 பேரில் உள்ள ஸ்ரீ  ல.சு.கட்சியினர் தற்பொழுதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை சரிகண்டுள்ளனர். இவர்களது நிலைப்பாடு தற்பொழுது நாட்டு மக்களின் கட்சியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாறியுள்ளது என்பதாகவே காணப்படுகின்றது. இப்படிப் பட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு கறிவேப்பிலையாகவே பார்க்கின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்காக தோன்றியது. தாய்க் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே காணப்படுகின்றது. உடன்பாடு காண்பதாக இருந்தால், பொதுஜன பெரமுன கட்சி தனது தாய்க் கட்சியுடனேயே இணைந்து கொள்ள வேண்டும் என கூறும் ஒரு குழுவினரும் ஸ்ரீ ல.சு.கட்சியில் உள்ளனர். இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சார்பான பிரச்சாரப் பணிகளில் பெரிதாக பிரகாசிக்காதவர்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் ஒரு குழுவும் காணப்படுகின்றது. இவர்கள் தங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் பொதுஜன பெரமுனவுடன் சென்று இணைய விரும்பாதவர்கள். இவர்களில் வாக்குப் பலம் உள்ளவர்களும் காணப்படுகின்றனர் என்பது முக்கியமானது.

கட்சியின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறிக் கொண்டு கட்சியின் இருப்பை தனியாக இருந்தாவது காத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்சி உணர்வு மேலிட்டவர்களும் இக்கட்சியின் ஒரு தொகுதியினராக காணப்படுகின்றனர். விட்டுக் கொடுப்புக்களாக இருந்தாலும், கட்சியின் தனித்துவத்தை இழந்து அது அமையக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இவர்கள் உறுதியாக உள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த அத்தனை குழுக்களையும் இணைத்துக் கொண்டே அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடின், கட்சிக்குள் ஏற்படும் உடைவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சார்பான கருத்துள்ள அவதானிகளின் ஆதங்கமாகும்.

நாட்டில் ஜனாதிபதிகளை கொண்டுவந்த பலமான ஒரு கட்சி, சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளையும் விட பலவீனமான ஒரு நிலைக்கு செல்வதிலிருந்து அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்பொழுது மேலெழுந்துள்ளது.

தேர்தல் ஒன்று வரும் போது தனித்துப் போட்டியிடுவதாக இருந்தால், தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களது விருப்புக்களை நிறைவேற்றக் கூடிய வகையில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முடியுமாக இருக்கும். கூட்டணி அமைத்தால், கூட்டணியிலுள்ள பிரதான கட்சிக்காக உழைத்தவர்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் காணப்படலாம். இப்படியான நிலைமைகளில் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர், வேட்பாளர் பட்டியலில் இடம்பிடிப்பது, பிரச்சாரம் என்பன போன்ற விடயங்களில் மன முறிவுகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக மாறுகின்றது.

சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணியிலிருந்து வாக்குக் கேட்கும் போது, அவர்களுக்கென்று ஒரு தனியாக வாக்கு வங்கி காணப்படுகின்றது. ஆனால், ஒரு வாக்கு வங்கியை இலக்கு வைத்து பிரிந்த இரு கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது கட்சிவாதங்கள் எழும் என்பது புரியாத ஒன்றல்ல.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனைகளை முன்வைத்தால், கூட்டணி அமைப்பதில் முறுகல் நிலை தோன்றும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டே, தாம் நிபந்தனையிட்டுள்ளோம் என பொதுத் தேர்தல் பொதுச் சின்ன நிபந்தனையைக் காட்டி கட்சி உறுப்பினர்களை சுதந்திரக் கட்சி திருப்திப்படுத்தியது.

இப்போது, பொதுச் சின்ன நிபந்தனையும் கைகூடாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனையே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அரசியல் ஊடக மேடைகளில் தெரிவித்து வரும் கருத்துக்கள் புடம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த பின்னணியிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் பணிகளை ஆரம்பிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் நிபந்தனை என்பன போன்ற மாயையைக்காட்டி கட்சி ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்கே மீண்டும் சுதந்திரக் கட்சி முயற்சிக்கின்றது என்பதை அரசியல் தெரிந்த சிறுபிள்ளையும் ஊகித்துக் கொள்ளும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குறுகிய கால அரசியல் வரலாற்றைக் கொண்டதாக இருப்பினும், அது மக்கள் சக்தியாக இன்று மறியுள்ளது என்பதை அக்கட்சி சந்தித்த இரு தேர்தல் முடிவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. இப்போது, தாய்க் கட்சி, சேய்க் கட்சி என்ற பேச்சுக்கு இடமில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. மக்கள் விருப்புக்களுக்கு ஏற்ற கொள்கையையும், திட்டத்தையும் முன்வைக்கும் கட்சி மக்களிடம் விலை போகின்றது.

இதனை வைத்துத்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலையும் மலர் மொட்டு சின்னத்திலேயே முகம்கொடுக்க முடியும் என்ற கருத்தை துணிந்து கூறிவருகின்றனர்.

கட்சியின் வாக்கு வங்கியில் எஞ்சியிருக்கும் வாக்குகளையாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காத்துக் கொள்வதாயின், பாரிய பிரயத்தனங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் அனைவருக்கும் விளங்க முடியுமான தெளிவான உண்மையாகும்.

– கஹட்டோவிட்ட முஹிடீன் M.A. (Cey)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>